2015-06-08 16:01:00

திருத்தந்தையுடன் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் சந்திப்பு


ஜூன்,08,2015. இஞ்ஞாயிறன்று மாலை, அர்ஜென்டீனா அரசுத்தலைவர்  Cristina Fernández de Kirchner அவர்களை, திருப்பீடத்தில்  சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருத்தந்தையாக 2013ம் ஆண்டு பதவியேற்றபின், அவரை, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடுவது இது ஐந்தாவது முறையாகும்.

ஒன்றரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின்போது, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Fernández de Kirchner, அவர்கள், அர்ஜென்டீனா நாட்டு மக்களின் அன்பை, திருத்தந்தைக்குத் தெரிவித்ததோடு, அம்மக்களுக்காக திருத்தந்தையின் ஆசீரையும் வேண்டினார்.

உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் (FAO) கூட்டமொன்றில் பங்குபெறுவதற்கென அர்ஜென்டீனாவிலிருந்து அரசுத்தலைவருடன் வந்திருக்கும் குழுவையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனாவிலிருந்து திருத்தந்தைக்கென அரசுத்தலைவர் கொணர்ந்த பல்வேறு பரிசுப் பொருள்களுள், அந்நாட்டு பிரபல ஓவியர் வரைந்த பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் உருவப்படம், அந்நாட்டு பிரபலக் கவிதைத் தொகுப்பு, ஒரு கூடை நிறைய அர்ஜென்டீனிய உணவுப்பொருள்கள் ஆகியவையும் அடங்கும்.

திருத்தந்தையும், தன் சார்பாக, அரசுத்தலைவருக்கு, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரஷ்ய புனிதப்படம் ஒன்றின் பிரதியை பரிசாக வழங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.