2015-06-08 16:31:00

சிரியா அகதிகள் சார்பாக இயேசு சபை அகதிகள் மையம்


ஜூன்,08,2015. ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் பல ஆயிரக்கணக்கானோர் சிரியாவில் வீடுகளை இழந்துள்ள நிலையில், புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கவேண்டிய அவசியம், உலகத் தலைவர்களுக்கு உள்ளது என அறிவித்துள்ளது, இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பு (JRS).

மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி சிரிய அகதிகளிடையே பணியாற்றிவரும் JRS அமைப்பின் பணியாளர்களுள் ஒருவரான இயேசுசபை அருள்பணி Ziad Hilal  பேசுகையில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களிடையே இருந்த ஒற்றுமைக் கலாச்சாரம் கடந்த நான்கு வருடப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிரியாவின் ஹோம்ஸ் நகரில் 50 விழுக்காட்டுப் பகுதி போரினால் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.

சிரியா நாட்டு மக்கள் பெருமளவில் ஏமாற்றங்களை தாங்கி, அமைதிக்காக ஆவலோடு காத்திருப்பதாகவும், உலகத்தலைவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் உரைத்தார் இயேசு சபை அருள்பணி Ziad Hilal.

2 கோடியே 20 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சிரியாவில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் குடிபெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர், 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்மை நாடுகளான ஜோர்டான், லெபனான் மற்றும் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.  

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.