2015-06-08 15:50:00

கடுகு சிறுத்தாலும் – ஒட்டுவதற்கு ஆள்கள் தேவை


அந்த ஊரில் வாழ்ந்து வந்த துறவி ஒருவர் துணிகள் தைத்து பிழைப்பு நடத்தி வந்தார். பலரும் அவரிடம் சென்று அறிவுரைகள் கேட்டு ஆசிர் பெற்றனர். இந்தத் துறவி பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதி பேரரசர் ஒருவர், துறவியிந் ஞானமிக்க வார்த்தைகளைக் கேட்பதற்காக, துறவியிடம் சென்றார். மன நிம்மதியை இழந்து வாழ்ந்த அந்தப் பேரரசர், துறவியின் போதகத்தைக் கேட்டார். மனஅமைதியையும் பெற்றார். அங்கிருந்து செல்வதற்கு முன்னர் துறவிக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினார் பேரரசர். அதனால் துறவியின் தொழிலுக்கு உதவுவதற்காக, வைரக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோல் ஒன்றைப் பரிசாக அளித்தார். ஆனால் துறவியோ அதை வாங்க மறுத்து விட்டார். பேரரசருக்கு முகம் வாடியது. ஞானியாரே, இது தங்களின் தொழிலுக்கு உதவும் என்று நினைத்தேன், வேறு என்ன பொருள் தங்களுக்கு உதவும் என்று சொன்னால், அதைப் பரிசாகத் தர விரும்புகிறேன் என்றார் பேரரசர். அதற்கு அந்தத் துறவி, ஒரு சாதாரண தையல் ஊசி போதுமானது என்றார். கத்தரிக்கோலை வாங்க மறுத்து ஒரு சிறிய ஊசியைக் கேட்கிறீர்களே, ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா என்றார் பேரரசர் பணிவுடன். அப்போது துறவி சொன்னார் - கத்தரிக்கோல் வெட்டும், பிரிக்கும், ஆனால், ஊசியோ, தைக்கும், இணைக்கும் என்று.

ஆம். சமுதாயத்துக்குத் தேவை வெட்டுபவர்கள் அல்ல, ஒட்டுபவர்களே.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.