2015-06-08 16:10:00

உக்ரைனின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து தலத்திருஅவை கவலை


ஜூன்,08,2015. உலக அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தவல்ல உக்ரைனின் தற்போதைய மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து உலகச் சமுதாயம் பாராமுகமாய் இருக்கமுடியாது என தெரிவித்துள்ளது அந்நாட்டின் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவை.

இஞ்ஞாயிறு மற்றும் திங்கள் தினங்களில் ஜெர்மனியின் பவேரியாவில் இடம்பெற்ற ஜி 7 அமைப்பின் தலைவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள உக்ரைன் திருஅவைத் தலைவர்கள், உக்ரைனுக்கு எதிரான அத்துமீறல்கள், உலக அமைதிக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளன என உரைத்துள்ளனர்.

உக்ரைனின் தற்போதைய நிலைகள் குறித்து தன் கவலையை வெளியிட்ட உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள், கிழக்கு ஐரோப்பாவில் அநியாயம் எதுவும் இடம்பெறவில்லை என நாம் தப்பான எண்ணத்தைக் கொண்டிருக்கமுடியாது என்றார்.

உக்ரைனில் அரசுக்கு ஏதிராக இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய அரசு நியமிக்கப்பட்டது. இருப்பினும், இரஷ்யாவாலும், இரஷ்ய ஆதரவுப் பெற்ற குழுக்களாலும், உக்ரைனின் பல இடங்கள் ஆக்ரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்த மோதல்களால் கிழக்கு உக்ரைனில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் பதட்டநிலைகளால், உலக அளவில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்து தலத்திருஅவை பலமுறை தன் கவலையை வெளியிட்டுள்ளது. 

ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.