2015-06-06 15:25:00

திருத்தந்தை பிரான்சிஸ் – சரயேவோ திருத்தூதுப் பயணம்


ஜூன்,06,2015. மூன்றரை ஆண்டுகள் போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருந்த போஸ்னியா-எர்செகொவினா குடியரசின் தலைநகரான சரயேவோவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அமைதி உங்களோடு இருப்பதாக” என்ற விருதுவாக்குடன், ஜூன்,06, இச்சனிக்கிழமையன்று, ஒருநாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார். இச்சனிக்கிழமை காலை 7.51 மணிக்கு உரோம் Leonardo da Vinci பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா A320 விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை, இந்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் காலை உணவை முடித்தார். பின்னர், தன்னோடு பயணம் செய்த பத்து நாடுகளின், 65 செய்தியாளர்களிடமும் பேசிய திருத்தந்தை, இப்பயணத்தின் நோக்கம் பற்றி விளக்கினார். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் என, பல்வேறு மதத்தினர்  நல்லிணக்கத்துடன் வாழ்ந்த சரயேவோ நகர், மேற்குலகின் எருசலேம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. ஆயினும், இந்நகரம், வரலாற்றில் அதிகம் துன்பத்தையும் அனுபவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டுவரை இடம்பெற்ற சண்டையில் மதங்களிடையே பகைமையும் ஏற்பட்டது. ஆயினும், போருக்குப் பின்னர், போஸ்னியா-எர்செகொவினாவில் தற்போது ஒப்புரவு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த அமைதி மற்றும் ஒப்புரவு முயற்சிகளை ஊக்கப்படுத்துவதற்காக இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறேன். அதேசமயம், இந்நாட்டிலுள்ள சிறுபான்மை குரோவேஷிய இன கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் சரயேவோ செல்கிறேன் என்று கூறி, செய்தியாளர்களின் பணிக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். போஸ்னியாவில் ஏறக்குறைய 15 விழுக்காட்டினர் குரோவேஷிய கத்தோலிக்கர். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், போஸ்னியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 18 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருத்தூதுப் பயணம் இடம்பெற்றது.

இத்தாலிய அரசுத்தலைவர் Sergio Mattarella அவர்களுக்கு, தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒரு காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சரயேவோவுக்கு விமானப் பயணம் மேற்கொள்ளும் இந்நேரத்தில் இத்தாலிய தீபகற்பத்தைக் கடக்கிறேன். போஸ்னியா-எர்செகொவினாவிற்கான எனது திருத்தூதுப் பயணம், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் மத்தியில் சந்திப்பையும் உரையாடலையும், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பையும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன். அதோடு, கத்தோலிக்க சமுதாயத்தை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் செல்கிறேன். இத்தாலி நாடு, ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றத்தைக் காணும் என்று நம்புகிறேன், இத்தாலிய மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்று தனது தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. அரசுத்தலைவர் Mattarella அவர்களும், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தை, இத்தாலியும் ஐரோப்பா முழுவதும் மிகுந்த கவனத்துடன் நோக்குகிறது. போஸ்னியா-எர்செகொவினாவில் திருத்தந்தையின் பிரசன்னம், பால்கன் பகுதி முழுவதற்கும், அமைதி மற்றும் ஒப்புரவின் மிக முக்கியமான செய்தியை வழங்கும். கடந்த காலக் காயங்களின் நினைவுகள் இன்னும் பலரில் இருக்கும்வேளை, அம்மக்கள் அவற்றிலிருந்து வெளிவர இப்பயணம் உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.