2015-06-06 15:39:00

சரயேவோவில் திருத்தந்தையின் திருப்பலியும், பிற நிகழ்வுகளும்


ஜூன்,06,2015. பெரிய Kosevo அரங்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். இவ்வெள்ளத்தின் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து திருப்பலி மேடை சென்று திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானின் வண்ணமான மஞ்சள்-வெண்மை நிறங்களில் எளிமையாக, ஆனால், அழகாக, திருப்பலி மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைதி மற்றும் நீதி என்ற தலைப்பில், இச்சனிக்கிழமை காலை 11 மணியளவில், இத்திருப்பலி தொடங்கியது. அப்போது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணியாகும். இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையும் வழங்கினார்.

இத்திருப்பலியை நிறைவு செய்து, மக்கள் வெள்ளத்தை ஆசிர்வதித்து சரயேவோ திருப்பீடத் தூதரகம் சென்று போஸ்னிய ஆயர்களுடன் மதிய உணவு அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். மதியம் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், மாலை நான்கு மணிக்குத் தனது பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை. திருப்பீடத் தூதரகத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற சரயோவோ இயேசுவின் திருஇதயப் பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார். அங்கு அந்நாட்டின் அருள்பணியாளர், துறவறத்தார் மற்றும் குருத்துவ மாணவரைச் சந்தித்தார்.

பின்னர், அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற பிரான்சிஸ்கன் சபையினர் மாணவர் மையம் சென்று, பிரிந்த கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் மற்றும் பிற மதப் பிரதிநிதிகளைச் சந்திப்பது, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் மையத்தில் இளையோரைச் சந்திப்பது இந்த ஒருநாள் பயணத் திட்டத்தில் உள்ளன. போஸ்னியாவில் இளையோர் வேலை வாய்ப்பின்மை பிரச்சனை 67 விழுக்காடாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சரயேவோ ஒருநாள் திருத்தூதுப் பயணம், அவரின் 8வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமைகின்றது.

அமைதிக்கும் ஒப்புரவுக்கும் திருத்தந்தை அழைப்பு விடுத்த இத்திருத்தூதுப் பயணத்தில், Srebrenica போஸ்னிய நகர இசைப் பள்ளி மற்றும் இசைக் குழுவின் செர்பிய மற்றும் முஸ்லிம் இனச் சிறாரும் பாடகர் குழுவில் இணைந்து பாடினர். 1990களில் நடந்த பால்கன் சண்டையின்போது Srebrenicaவில் ஏறக்குறைய எட்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். வத்திக்கான் வானொலி செய்தியாளரிடம் இக்குழு பற்றிப் பேசிய இந்த இசைக் குழுவின் தலைவர்  Ismar Poric அவர்கள், பல்வேறு இனங்கள் மத்தயில் ஒப்புரவை ஏற்படுத்துவதன் ஒரு திட்டம் இது என்றார். இது போஸ்னியாவுக்கு மட்டுமல்லாமல், அனைத்துலக குழுவுக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த ஒருநாள் திருத்தூதுப் பயணம், போஸ்னியா-எர்செகொவினாவில் அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்கும் என நம்புவோம். செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.