2015-06-05 15:56:00

திருத்தந்தையின் சரேயேவோ திருத்தூதுப்பயணம்


ஜூன்,05,2015. போஸ்னியா-எர்செகொவினா குடியரசின் தலைநகர் சரேயேவோவுக்கு, இச்சனிக்கிழமையன்று ஒருநாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 06, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு உரோம் நகரிலிருந்து சரேயேவோவுக்குப் புறப்படும் திருத்தந்தை, விமானப்பயணத்தில் காலை உணவை முடித்து, காலை 9 மணியளவில் சரேயேவோ சென்றடைவார்.

“அமைதி உங்களோடு இருப்பதாக” என்ற விருதுவாக்குடன் இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரேயேவோ அரசுத்தலைவர் மாளிகையில் அவரைச் சந்தித்த பின்னர், அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரையாற்றுவார்.

பின்னர், Kosevo அரங்கத்தில் திருப்பலி, திருப்பீடத் தூதரகத்தில் ஆயர்களுடன் மதிய உணவு, மாலை 4.20 மணியளவில் சரேயேவோ பேராலயத்தில் போஸ்னியா-எர்செகொவினா அருள்பணியாளர், துறவறத்தார் மற்றும் குருத்துவ மாணவரைச் சந்தித்தல், பின்னர் பிரிந்த கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள், பிற மதப் பிரதிநிதிகளைச் சந்தித்தல், இளையோரைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளை நிறைவு செய்து உரோம் திரும்புவார் திருத்தந்தை.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சரேயேவோ திருத்தூதுப் பயணம், அவரின் 8வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமையும்.

முன்னாள் யுக்கோஸ்லாவிய கூட்டுக் குடியரசைச் சேர்ந்த போஸ்னியா-எர்செகொவினா, அக்கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டுவரை மூன்றரை ஆண்டுகள் கடும் சண்டையால் அந்நாடு பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.