2015-06-05 15:45:00

2050ல் மூன்று பூமிக் கோளங்கள் தேவைப்படும், ஐ.நா.


ஜூன்,05,2015. இப்பூமியின் வளங்கள் சுரண்டப்படும் தற்போதைய நிலை நீடித்தால், 2050ம் ஆண்டில் 960 கோடியாக உயரும் உலக மக்களின் உயிர் வாழ்வுக்கும், அவர்களுக்கு அவசியமான பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் மூன்று பூமிக் கோளங்கள் தேவைப்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஜூன்,05, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், உலகினர் அனைவருக்கும் தரமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கான வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, இப்பூமிக் கோளத்தின் நீரும், நிலமும், பிற சக்திகளும் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன். 

இப்பூமி வழங்குவதற்கு அதிகமாகவே, அதன் இயற்கை வளங்கள், மனித சமுதாயத்தால் அதிகமதிகமாகச் சுரண்டப்பட்டு வருவதால், இவ்வுலகினர் தங்களின் நடவடிக்கைகளை மாற்ற வேண்டியது இன்றியமையாதது என்று பான் கி மூன் அவர்கள் கூறினார்.

"700 கோடிக் கனவுகள் : ஒரே பூமி, கவனமுடன் செலவு செய்" என்பது இவ்வாண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் தலைப்பாகும்.

மேலும், செல்வங்களைச் சேர்த்து பெருமை கொள்வதைவிட மரங்களை வளர்த்து பெருமிதம் கொள்ளுங்கள் என இவ்வுலக தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்னும், மனிதரால் உருவாக்கப்படும் கரியமில வாயு கடல்வாழ் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த எச்சரிக்கையை இலண்டனில் நடைபெறும் ஒரு மாநாட்டில் அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.