2015-06-04 15:57:00

புனித பவுல் பாப்பிறை கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு


ஜூன்,04,2015 திருத்தூதரான புனித பவுல் பன்னாட்டு பாப்பிறை கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜூன் 3, இப்புதன் பிற்பகல், நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் தலைமையில் ஆடம்பரத் திருப்பலி நிகழ்ந்தது.

பல்வேறு நாடுகளிலிருந்து உரோம் நகரில் அருள் பணியாளர் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் தங்கி பயிலும் வண்ணம் உருவாக்கப்பட்ட திருத்தூதர் புனித பவுல் கல்லூரி, 1965ம் ஆண்டு, டிசம்பர் 3ம் தேதி, மறைபரப்புப் பணியாளர்களின் பாதுகாவலாரான இயேசு சபை, புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருநாளன்று, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பவுல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

50 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான குரு மாணவர்கள், திருத்தூதர் புனித பவுல் கல்லூரி வழியே,  இறையியல், மறைபரப்புப் பணியியல், திருஅவை வரலாறு, திருஅவைச் சட்டங்கள் ஆகிய துறைகளில் மேல்படிப்பு பயின்று வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் மேற்பார்வையில் இயங்கிவரும் இக்கல்லூரி, இந்தியா, இலங்கை, மற்றும், ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் குரு மாணவர்களுக்கு பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.