2015-06-04 15:37:00

திருத்தந்தை, மூன்று காரணங்களுக்காக சரயேவோ செல்கிறார்


ஜூன்,04,2015 Bosnia - Herzegovina நாட்டின் நன்மைத்தனத்தைத் தூண்டியெழுப்புதல், உடன்பிறந்தோர் உணர்வை வளர்த்தல், உரையாடலையும், அமைதியையும் ஊக்குவித்தல் ஆகிய மூன்று காரணங்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரயேவோ நகருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

ஜூன் 6, வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சரயேவோ நகருக்கு மேற்கொள்ளும் எட்டாவது திருத்தூதுப் பயணத்தைக் குறித்து வத்திக்கான் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் 'ஐரோப்பாவின் எருசலேம்' என்றழைக்கப்பட்ட நகருக்கு, உரையாடல் மற்றும் அமைதியின் ஒரு பயணியாக தான் வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்ற விருதுவாக்குடன் நிகழும் இத்திருப்பயணத்தில், மக்களுடன் நிகழ்த்தும் திருப்பலி, ஏனைய மதத்தினரோடு இடம்பெறும் உரையாடல், இளையோரைச் சந்தித்தல் என்ற மூன்று முக்கிய நிகழ்வுகள், ஒரே நாளில் நடைபெறுவதையும் கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வேறுபட்ட மதங்களையும், கலாச்சாரங்களையும் சார்ந்தவர்கள், உரையாடலை மேற்கொள்ளும்போது, அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளே அவர்கள் சமுதாயத்தை இன்னும் செறிவு மிகுந்த சமுதாயமாக மாற்றும் என்பதை Bosnia - Herzegovina நாடு மற்றவர்களுக்குச் சொல்லித் தரும் என்ற நம்பிக்கை, கர்தினால் பரோலின் அவர்களின் பேட்டியில் வெளிப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.