2015-06-04 15:47:00

உலக நாடுகள் காத்துக்கிடப்பது ஏன் - சிரியாவின் பேராயர் வேதனை


ஜூன்,04,2015 சிரியாவிலும், ஈராக்கிலும் கட்டுப்பாடின்றி நடைபெற்றுவரும் கொடுமைகளை முடிவுக்குக் கொணராமல், உலக நாடுகள் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற வேதனை நிறைந்த கேள்வியை, அலெப்போவின் பேராயர் ஒருவர் எழுப்பியுள்ளார்.

அலெப்போவின் கிரேக்க மேல்கத்திய கத்தோலிக்க பேராயர், Jean-Clement Jeanbart அவர்கள், Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில், இத்தனை ஆயிரம் கொலைகள் நிகழ்ந்தும், உலக நாடுகள், இக்கொடுமைகளை நிறுத்த இன்னும் எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

Maloula, Mosul, Idleb, Palmyra என்று ஒவ்வொரு நகராக ISIS தீவிரவாதக் குழுவின் பிடியில் வீழ்ந்து வருவதைக் கண்டும், மேற்கத்திய நாடுகள் பார்வையாளராக இருப்பது மிகுந்த வேதனை தருகிறது என்று, பேராயர் Jeanbart அவர்கள் கூறினார்.

அலெப்போ நகரில் 2,50,000மாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,00,000மாகக் குறைந்திருக்கும் அவலத்தைச் சுட்டிக்காட்டி, அலெப்போவின் கல்தேய வழிபாட்டு முறை ஆயர், Antoine Audo அவர்கள், "என் மக்களோடு சேர்ந்து கதறி அழுவதைத் தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை" என்று ஒரு மடலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, இச்செவ்வாயன்று, அலெப்போ நகரை ISIL தீவிரவாதிகள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.