2015-06-03 17:14:00

பிலிப்பின்ஸ் நாட்டில் 'சில்சிலா' வெளியிட்டுள்ள இரமதான் செய்தி


ஜூன்,03,2015 ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்ற காரணத்தால், மக்கள் கொல்லப்படும் இக்காலக் கட்டத்தில், நாம் அனைவரும் ஒரே கடவுளின் படைப்புக்கள், எனவே, நம் உயிர்கள் அனைத்தும் ஒரே அளவில் மதிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை, பிலிப்பின்ஸ் நாட்டின் இஸ்லாமிய-கிறிஸ்தவ உரையாடல் அமைப்பான 'சில்சிலா' (Silsilah) வெளியிட்டுள்ளது.

ஜூன் 18ம் தேதி முதல், ஜூலை 18ம் தேதி முடிய கொண்டாடப்படும் இரமதான் மாதத்தையொட்டி, 'சில்சிலா' அமைப்பு வெளியிட்டுள்ள இச்செய்தி, மதத்தின் அடிப்படையில் வளர்ந்துவரும் வன்முறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

பிலிப்பின்ஸ் நாட்டில், குறிப்பாக, மிந்தனாவோ (Mindanao) பகுதியில், அடிப்படைவாதக் குழுக்களால் வளர்ந்துவரும் வன்முறைகள், உலகின் பிற பகுதிகளில் நிகழும் வன்முறைகளின் எதிரொலி என்று சில்சிலா அமைப்பு கூறியுள்ளது.

உண்மையான இஸ்லாமிய மதத்தின் அடிப்படை பண்புகளை கேள்விக்குள்ளாக்கும் இவ்வன்முறைகளைக் களைய, உலக அரசுகளும், இஸ்லாமிய அமைப்புக்களும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென 'சில்சிலா' வெளியிட்டுள்ள இரமதான் விண்ணப்பம், Fides செய்தியில் வெளியாகியுள்ளது.

வன்முறைகளிலிருந்து இவ்வுலகைத் தூய்மைப்படுத்தும் புனிதப் போரை இஸ்லாமியர் அனைவரும் மேற்கொள்ள இரமதான் மாதம் தகுந்ததொரு தருணம் என்று, பிலிப்பின்ஸ் நாட்டு உரையாடல் அமைப்பான 'சில்சிலா' வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.