2015-06-03 16:47:00

திரிகோணமலையின் புதிய ஆயராக அருள்பணி கிறிஸ்டியன்


ஜூன்,03,2015 இலங்கையின், திரிகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று நியமித்துள்ளார்.

திரிகோணமலை ஆயராகப் பணியாற்றிவந்த ஜோசப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்கள், பணி ஓய்வுபெற விரும்பி அனுப்பியிருந்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, புதிய ஆயராக, 55 வயதான அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்களை நியமித்துள்ளார்.

கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயராகப் பணியாற்றிவந்த ஜோசப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்கள், திரிகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர், 2012ம் ஆண்டு, திரிகோணமலை, தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டதும், அதன் ஆயராக கடந்த மூன்று ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

78 வயதான ஆயர் சுவாமிப்பிள்ளை அவர்கள் பணி ஒய்வு பெறுவதைத் தொடர்ந்து, அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்கள், ஆயராக நியமனம் பெற்றுள்ளார்.

1960ம் ஆண்டு, திரிகோணமலையில், கிறிஸ்துபிறப்பு நாளான டிசம்பர் 25ம் தேதி பிறந்த நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்கள், 1986ம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார்.

மட்டக்களப்பு, இருதயபுரம், அக்கறைப்பட்டு ஆகிய இடங்களில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிவந்த அருள்பணி கிறிஸ்டியன் அவர்கள், ஈராண்டுகள் உரோம் நகர் உர்பானியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்விபெற்றபின், தாயகம் திரும்பினார்.

2001ம் ஆண்டு முதல் கண்டி தேசிய குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த அருள்பணி கிறிஸ்டியன் அவர்கள், 2011ம் ஆண்டுமுதல் திரிகோணமலை முதன்மை குருவாகவும், 2012ம் ஆண்டுமுதல், அம்மறைமாவட்டத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.