2015-06-03 16:29:00

அமைதி ஆர்வலர்கள் : 1984ல் நொபெல் அமைதி விருது(Desmond Tutu)


ஜூன்,03,2015. Apartheid என்ற நிறவெறிக் கோட்பாடு, தென்னாப்ரிக்காவில் 1948ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை வெள்ளை இன அரசால் சட்டத்தின் மூலம் அமலில் இருந்த ஓர் அமைப்பு முறையாகும். இதன்மூலம், அந்நாட்டின் பெரும்பான்மை பூர்வீக கறுப்பு இன மக்களின் உரிமைகளும், கழகங்களும், இயக்கங்களும் தடை செய்யப்பட்டன. இந்த இனப் பாகுபாட்டுக் கருத்தியல், தென்னாப்ரிக்காவின்கீழ் இருந்த தென்மேற்கு ஆப்ரிக்காவிலும் அமலில் இருந்தது. அனைத்து தென்னாப்ரிக்கர்களும் அதிகாரப்பூர்வமாக இனக் குழுவாகச் சட்டப்படி ஒதுக்கப்பட்டனர். ஒவ்வோர் இனமும் குறிப்பிட்ட பகுதியில் வாழ வேண்டுமென்று கட்டுப்படுத்தப்பட்டு பொதுநல வசதிகளிலிருந்தும் பிரிக்கப்பட்டது. தேசியத் தேர்தல்களில் வெள்ளை இனத்தவர் மட்டுமே ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். கறுப்பின தென்னாப்ரிக்கர்கள், நாட்டின் ஒதுக்குப்புறங்களிலுள்ள அவர்களின் பூர்வீக இடங்களில் உள்ளூர் தேர்தல்களில் மட்டும் பங்கெடுத்தனர். இனங்களுக்கிடையே திருமணம் செய்வதற்கும், தொழிற்சங்கங்ளை உருவாக்கவும், சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்வதற்கும் கறுப்பினத்தவர் சட்டப்படி தடை செய்யப்பட்டனர். நாட்டுக்குள்ளே பயணம் செய்வதற்கு கறுப்பினத்தவர்க்குக் கடவுட்சீட்டுத் தேவைப்பட்டது. வெள்ளை இனத்தவருக்கென புதிதாக ஒதுக்கிய பகுதிகளில் கறுப்பினத்தவரும் ஆசியர்களும் வாழ்வதற்குத் தடை செய்யப்பட்டனர். இந்த அமைப்புமுறைகளைக் குறை கூறுபவர் பொதுவில் பேசுவது தடை செய்யப்பட்டதுடன், வீட்டுக்காவல் தண்டனையும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

இப்படி வெள்ளை இன அரசால் கொடூரமாய் அரங்கேற்றப்பட்ட நிறவெறிக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய அந்நாட்டு ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களுக்கே 1984ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இவரைப் போல் தென்னாப்ரிக்காவில் நிறவெறி அமைப்புமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் காக்கப்படவும் உழைத்த ஆர்வலர் Albert John Lutuli அவர்கள் 1960ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் ஆப்ரிக்கர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆங்லிக்கன் சபை பேராயர் டுட்டு அவர்களின் நிறவெறிக்கெதிரான தெளிவான கண்ணோட்டமும், அச்சமில்லாத நிலைப்பாடும் அனைத்து ஆப்ரிக்க விடுதலைப் போராளிகளையும் வன்முறையற்ற வழியில் ஒன்றிணைந்து போராட வைத்தது. 1961ல் ஷார்ப்வில்லேயில் கறுப்பு இன மக்கள் படுகொலை செய்யப்பட்டது, 1976ல் சொவேட்டோவில் வெள்ளை இன அரசுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியில் கறுப்பு இன மக்கள் கொல்லப்பட்டது ஆகிய வன்செயல்களையும் விடுத்து நிறவெறிக்கு எதிராக வன்முறையற்ற வழியில் போராடுவதிலே உறுதியாய் இருந்தார் பேராயர் டுட்டு.

தென்னாப்ரிக்காவின் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவராகிய பேராயர் டுட்டு, 1931ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, தென்னாப்ரிக்க டிரான்ஸ்வால் மாநிலத்தின் Klerksdorpல் பிறந்தார். இவருக்கு 12 வயது நடந்தபோது இவரது குடும்பம் ஜொஹானஸ்பெர்கில் குடியேறியது. இவர் மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் இவரின் குடும்ப நிலையால், இவரது தந்தையைப் போல இவரும் ஆசிரியரானார். தென்னாப்ரிக்க அரசு, கறுப்பின தென்னாப்ரிக்கர்களுக்கு குடியுரிமையை நீட்டிக்கவில்லை. அப்போது வெள்ளை இன தேசிய கட்சி நிறவெறிக் கோட்பாட்டை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தது. அதனால் அனைத்து இனங்களும் முழுமையாகப் பிரிக்கப்பட்டன. கறுப்பினச் சிறாருக்கு ஒருவகை கல்வி அமைப்பை அரசு கொண்டு வந்தது. இதற்கு ஒத்துழைக்க மறுத்து ஆசிரியப் பணியை விட்டு விலகி தனது மக்களுக்காக உழைப்பதற்கு உறுதி எடுத்தார் பேராயர் டுட்டு. ஒருமுறை இவர்கள் பகுதியில் குருவாக இருந்த ஆங்லிக்கன் சபை குரு இவரது தாய்க்கு தனது தொப்பியைக் கழற்றி வாழ்த்துச் சொன்னதைக் கண்டு வியப்படைந்தார். ஒரு சாதாரண துப்பரவு வேலை செய்யும் பெண்ணுக்கு ஒரு வெள்ளை இனக் குரு இவ்வளவு மரியாதை கொடுக்கிறாரே என எண்ணினார் பேராயர் டுட்டு. அக்குருவின் ஆலோசனையினால் டுட்டு அவர்களும் இறையியல் படித்தார். 1966ல் இங்கிலாந்தில் இறையியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1975ல் ஜொஹானஸ்பர்க் புனித மரியா பேராலயத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தப் பொறுப்பை ஏற்ற முதல் கறுப்பின ஆப்ரிக்கர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

1978ல் லெசோத்தோ ஆங்லிக்கன் சபை ஆயரானார் டுட்டு. தெற்கு ஆப்ரிக்க திருச்சபைகள் அவையின் முதல் கறுப்பினச் செயலராக 1978ல் நியமிக்கப்பட்டார். நிறவெறி அமைப்பு தீமையானது மற்றும் கிறிஸ்தவப் பண்புக்கு முரணானது என்று சொல்லி இவ்வமைப்புக்கு எதிராக தேசிய அளவில் செயல்பட இந்தச் செயலர் பதவி பேராயர் டுட்டு அவர்களுக்கு உதவியது. அனைத்து ஆப்ரிக்கர்களுக்கும் சம உரிமைக்கும் பொதுவான கல்வி அமைப்புக்கும் அழைப்பு விடுத்தார். கடவுட்சீட்டுச் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினார். தென்னாப்ரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக வன்முறையற்ற போராட்டத்தை ஊக்கப்படுத்திய பேராயர் டுட்டு, அந்நாட்டுக்கு எதிரான பொருளாதாரத் தடைக்கும் பரிந்துரைத்தார். அரசு, இவரின் கடவுட்சீட்டைப் பறித்துக்கொண்டு பயணம் செய்யும் வாய்ப்பைத் தடுத்தது. ஆனால் பன்னாட்டு அளவில் எழுந்த அழுத்தங்களால் அரசு மீண்டும் இவரிடம் கடவுட்சீட்டைக் கொடுத்து விட்டது. 1984ல் பேராயர் டுட்டு அவர்களுக்கு நொபெல் அமைதி விருதும் வழங்கப்பட்டது.

தென்னாப்ரிக்காவில் மனித மாண்புக்கும், மக்களாட்சிக்கும் குரல்கொடுக்கும் அனைத்து ஆப்ரிக்கர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இவரின் இந்தப் பணிக்கு ஆதரவு வழங்கும் விதமாகவும் இந்த நொபெல் விருது வழங்கப்பட்டது. இதற்கு இரு ஆண்டுகள் கழித்து கேப் டவுண் பேராயராக நியமிக்கப்பட்டார் இவர். தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் சபையின் தலைவராக நியமனம் பெற்ற முதல் கறுப்பினத்தவர் இவர். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் 1990ல் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் இனப்பாகுபாட்டுச் சட்டங்களை வெள்ளை இன அரசு அகற்றத் தொடங்கியது. 1994ல் முதல் முறையாக பல இனத்தவர் கலந்துகொண்ட முதல் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் நெல்சன் மண்டேலாவின் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. மண்டேலா அரசுத்தலைவரான பின்னர், நாட்டில் உண்மை மற்றும் ஒப்புரவு குழுவுக்கு பேராயர் டுட்டு அவர்களைத் தலைவராக நியமித்தார்.

தற்போது ஓய்வில் இருந்தாலும், பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் காக்கப்பட குரல் கொடுத்து வருகிறார் பேராயர் டுட்டு. அமெரிக்க விடுதலைப் பதக்கம் உட்பட பல விருதுகளையும், கவுரவப் பட்டங்களையும் பெற்றிருப்பவர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.