2015-06-02 15:09:00

கடுகு சிறுத்தாலும்... நம்மையே நாம் அறிந்தால்...


ஒலாவோ பிலாக் (Olavo Bilac) என்பவர், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடி வந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி பிலாக்கிடம் கேட்டுக்கொண்டார்.

பிலாக், பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்: "ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழல் நிம்மதி தரும்" என்ற விளம்பர வரிகளை எழுதி, நண்பரிடம் கொடுத்தார் பிலாக்.

ஒரு சில வாரங்கள் சென்று, அவர் தன் நண்பரைச் சந்தித்தார். "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்து கொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.

நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம் என்பதைப் பொருத்து, நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

"உன்னை நீ அறிவதே, உண்மை அறிவின் ஆரம்பம்" என்று சொன்னவர், கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் (Aristotle)

“நம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்வது, வேதனை தரும் என்பதால், நம்மில் பலர், நம்மையே அறிந்துகொள்வதை தவிர்த்துவிட்டு, கற்பனை என்ற இன்பத்தில் நம்மையே மறக்க முயல்கிறோம்” என்று சொன்னவர், ஆங்கில அறிஞர், Aldous Huxley.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.