2015-06-02 15:16:00

அமைதியான நல்லிணக்கத்துக்கு ஆதரவளிக்க சரேயேவோ திருப்பயணம்


ஜூன்,02,2015.  சரேயேவோவுக்குத் தான் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் போஸ்னியா-எர்செகொவினா கிறிஸ்தவருக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைவதற்குச் செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போஸ்னியா-எர்செகொவினா குடியரசின் தலைநகர் சரேயேவோவுக்கு, வருகிற சனிக்கிழமையன்று ஒருநாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டினருக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இத்திருத்தூதுப் பயணத்தின் நோக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

போஸ்னியா-எர்செகொவினா கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலை ஊக்கவிக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக, அந்நாட்டில் அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்கவிக்கவும் இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

அமைதி உங்களோடு இருப்பதாக என்பதே இந்த எனது திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு என்றும், அமைதியின் ஒரு சகோதரத் தூதுவராக உங்கள் மத்தியில் வருகிறேன் என்றும் அம்மக்களிடம் காணொளிச் செய்தியில் பேசியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு சமூகத்துக்கும் எனது நட்பையும், இறைவனின் இரக்கத்தையும், கனிவையும், அன்பையும் வெளிப்படுத்த வருகிறேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “அன்புக் கலாச்சாரத்தின் சேவையில் தங்களை ஈடுபடுத்தும் அனைவரையும் நற்செய்தியின் ஒளி வழி நடத்துகின்றது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.