2015-06-01 16:13:00

லெபனான் நாட்டில் திருஅவையின் உச்சநீதிமன்றத் தலைவர்


ஜூன்,01,2015 லெபனான் நாட்டிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து வருகிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 30, கடந்த சனிக்கிழமை முதல், லெபனான் நாட்டில் ஒருவார மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ள கத்தோலிக்கத் திருஅவையின் உச்சநீதிமன்றத்தின் தலைவர், கர்தினால் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.

1996ம் ஆண்டு முதல், 1999ம் ஆண்டு முடிய லெபனான் நாட்டில் திருப்பீடத்தின் தூதராக தான் பணியாற்றிய காலத்தை, கர்தினால் மம்பெர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

பெய்ரூட்டில் பணியாற்றும் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros al-Rahi அவர்களின் அழைப்பை ஏற்று அந்நாடு சென்றிருக்கும் கர்தினால் மம்பெர்த்தி அவர்கள், லெபனான் நாட்டின் அரசு அதிகாரிகளையும், மதத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

லெபனான் நாடு தன் அடுத்த அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதால், கர்தினால் மம்பெர்த்தி அவர்களின் பயணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.