2015-06-01 16:27:00

பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜெர்மனி


ஜூன்,01,2015 மக்கள் தொகை பெருக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலையில், பிறப்பு வீதம் வீழ்ச்சியடைவது வளர்ச்சியடைந்த நாடுகளை பாதிப்பதாக உள்ளதென ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்து வரும் ஜப்பானைப் பின்தள்ளிவிட்டு உலகிலேயே குறைந்த அளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி தற்போது மாறி இருக்கிறதென Hamburg Institute of International Economics என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஜெர்மனியில் ஆயிரம் பேருக்கு 8.2 குழந்தைகள் என்ற வீதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு வீதம் இருந்துள்ளது என்றும், ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 என்ற அளவில் இருந்துள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஏனைய ஐரோப்பிய நாடுகளில், போர்த்துக்கல்லில் பிறப்பு வீதம் 9 ஆகவும், இத்தாலியில் இது 9.3 ஆகவும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் பிறப்பு வீதம் 13 என்ற அளவிலும் உள்ளது.

ஜெர்மனியில் பிறப்பு வீதம் குறைவதால், உழைக்கும் வயதில் இருப்போர் அதாவது 20 முதல் 65 வயதுக்குட்பட்டோரின் தொகை மொத்த மக்கள் தொகையில் தற்போது 61 விழுக்காடாக உள்ளது என்றும், வரும் 2030ம் ஆண்டளவில் இது 54 விழுக்காடாக குறைந்துவிடும் என்றும் Hamburg Institute of International Economics எச்சரித்துள்ளது.

பிறப்பு வீதம் குறைவதால், நாட்டில் வயதானவர்களின் வீதம் அதிகரித்துவி டும் என்று அஞ்சப்படுகின்றது.

தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க திறன்படைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை என்றும் அதிக அளவு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டுமென்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஜெர்மானிய அரசுத் தலைவர், ஆஞ்ஜெலா மெர்கலின் அரசு, குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கு அதிக அளவு ஆதரவுகளை அளித்து வந்தாலூம், அந்நாட்டின் மக்கள் தொகை குறைந்து கொண்டு வருகிறது. அதே நேரம், ஆப்பிரிக்காவின் நைஜரில் ஆயிரம் பேருக்கு 50 குழந்தைகள் புதிதாக பிறக்கின்றன.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.