2015-05-30 15:41:00

நாகரீகமான ஒரு சமுதாய வளர்ச்சியின் அளவுகோல்


மே,30,2015. கருவில் வளரும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை, அவர்களின் வாழ்வையும், குடிபெயர்ந்தோர், வேலையில்லாதோர் போன்ற பசித்திருக்கும் மக்களையும் பேணுவதைப் பொருத்து நாகரீகமான ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அளக்கப்படும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அறிவியல் மற்றும் வாழ்வுக் கழகத்தின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,  அக்கழகத்தின் 400 உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வாழ்வைப் பாதுகாப்பதற்கு அறிவியல் எப்போதும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறினார்.

புறக்கணிப்பு கருத்தியல் கொண்ட ஒரு சமுதாயத்தில், குழந்தைகள், வயதானவர்கள் என ஒவ்வொரு மனிதருக்கும் பணியாற்றுவதற்கு கிறிஸ்துவின் அன்பு நம்மை உந்தித் தள்ளுகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

அறிவியல், உண்மையில், மனிதருக்குச் சேவையாற்றுவதாக உள்ளதே தவிர, அறிவியலின் சேவையில் மனிதர் இல்லை என்பதால், ஒரு நீதியான சமூகம், மனிதர் தாயின் கருவில் உருவானது முதல் இயற்கையான மரணம் அடையும்வரை அதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை ஏற்கிறது என்று மேலும் கூறினார் திருத்தந்தை.

கருக்கலைப்பு, கருணைக்கொலை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இறப்புகள், பயங்கரவாதம், போர், வன்முறை, பாதுகாப்பற்ற தொழில் அமைப்புகளில் ஏற்படும் இறப்புகள், குடிபெயர்வோர் கடல் பயணத்தில் இறப்பது என பல்வேறு முறைகளில் மனித வாழ்வு இழக்கப்படுவது பற்றியும் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.