2015-05-29 16:20:00

நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் நில அமைப்புகளில் மாற்றம்


மே,29,2015. கடந்த ஏப்ரலில் நேபாளத்தைத் தாக்கிய நிலநடுக்கம் உள்ளூர் நில அமைப்புகளில் கவலைப்படத் தக்க அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக எவரெஸ்ட் மலைச்சிகரத்தை ஒட்டிவாழும் ஷெர்ப்பா எனப்படுகின்ற மலையேறி வழிகாட்டிகளின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் 25ம் தேதி தாக்கிய 7.8 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நிலத்திலும், உறைபனி ஏரிப் பகுதிகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் சமூகத் தலைவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

சில சிறிய ஏரிகள் நிலத்துக்கு அடியில் புதையுண்டு, வேறு சில இடங்களில் வெளிப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் உறைபனி ஏரிக்குளம் ஒன்று பெருக்கெடுத்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நிலநடுக்கத்தின் பாதிப்புகளாலும், அதிகரிக்கும் கோடைகால வெப்பத்தாலும் சில உறைபனி ஏரிகள் திடீரென்று உருகி மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.