2015-05-29 16:01:00

சரயேவோ திருத்தூதுப் பயண விபரங்கள்


மே,29,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஜூன் 6ம் தேதி போஸ்னியா-எர்செகோவினா தலைநகர் சரயேவோ நகருக்கு மேற்கொள்ளும் ஒருநாள் திருத்தூதுப் பயணம் பற்றிய விபரங்கள் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.

அமைதி மற்றும் ஒப்புரவு என்ற தலைப்பில் நடைபெறும் இத்திருத்தூதுப் பயணம், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் சரயேவோவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம் பெறுகின்றது.

ஜூன் 6ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு சரயேவோ விமான நிலையத்தைச் சென்றடையும் திருத்தந்தையை, மூன்று குரோவேஷியர்களைக் கொண்ட ஒரு குழு வரவேற்று, அரசுத்தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லும். அங்கு அரசுத்தலைவரைத் தனியே சந்தித்த பின்னர், அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரையாற்றுவார் திருத்தந்தை.

பின்னர் ஒலிம்பிக் அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவார். அதன் பின்னர் போஸ்னியா-எர்செகோவினா குடியரசின் ஆறு ஆயர்களுடன் மதிய உணவருந்துவார். பிற்பகலில், சரயேவோ பேராலயத்தில் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் குருத்துவ மாணவர்களைச் சந்திப்பார் திருத்தந்தை.

பின்னர் பிரான்சிஸ்கன் மையத்தில் உள்ளூர் முஸ்லிம், யூத மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலைவர்களைச் சந்தித்த பின்னர், அந்நாளின் இறுதி நிகழ்வாக, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் இளையோர் மையத்தில் இளையோரையும் சந்திப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதி உங்களோடு இருப்பதாக என்ற விருதுவாக்குடன், சரயேவோவில் ஒருநாள்  திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இரவு 9.20 மணிபோல் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். இது திருத்தந்தையின் 8வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமையும்.

1992ம் ஆண்டில் போஸ்னியா-எர்செகோவினா, முன்னாள் யுகோஸ்லாவியா கூட்டரசிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, 1995ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் அந்நாடு கடும் சண்டையால் பாதிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.