2015-05-29 16:12:00

ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் நாள் மே 29


மே,29,2015. ஐ.நா. அமைதிப் படை வீரர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உலகெங்கும் அதிகரித்து வருகின்ற போதிலும், அப்படை வீரர்கள் சவாலான சூழல்களில், தியாகத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்று ஐ.நா. அமைதிப்படை அமைப்பு தெரிவித்தது.

மே 29, இவ்வெள்ளியன்று, உலக ஐ.நா. அமைதிப் படை நாள் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு பேட்டியளித்த ஐ.நா. அமைதிப்படை உதவி பொதுச் செயலர் Edmond Mulet அவர்கள், ஐ.நா. அமைதிப்படை உறுப்பினர்கள் ஆபத்துக்கள் மத்தியில் பணியாற்றுவது வியப்பூட்டுவதாக உள்ளது என்று கூறினார்.

கடந்த ஆண்டுகளில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட படை வீர்ர்களும், காவல்துறையினரும், மற்ற மக்களும் ஐ.நா. அமைதிப் பணியில் பங்கெடுத்துள்ளனர், தற்போது ஒரு இலட்சத்து ஏழாயிரம் பணியாளர், 16 பணித்தளங்களில் பணியில் உள்ளனர் என்றும் கூறினார் Mulet.

ஐ.நா.வின் எழுபது ஆண்டு வரலாற்றில், ஐ.நா. அமைதி காக்கும் பணியில் 71 தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், 1948ம் ஆண்டில் இந்த அமைதிப்படை தனது பணியைத் தொடங்கியதிலிருந்து, இப்படையின் 3,300க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்றும் கூறினார் Mulet.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.