2015-05-28 15:58:00

விசுவசிப்பதை வாழும் கிறிஸ்தவர் இயேசுவிடம்பிறரை ஈர்க்கின்றனர்


மே,28,2015. தங்களின் விசுவாசத்திலும் வாழ்விலும் முரண்படாமல் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசுவிடம் மக்கள் வருவதற்கும், அம்மக்கள் எழுப்பும் குரல்களுக்கும், தங்களின் ஆன்மீக நலனையும், இறையருளையும், மீட்பையும் தேடும் மக்களுக்கும் உதவுகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நாம் எத்தகைய கிறிஸ்தவர்கள் என்று ஆன்ம பரிசோதனை செய்யுமாறு, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பார்வையற்ற பர்த்திமேயு அவர்கள், தான் இயேசுவால் குணப்படுத்தப்படுவதற்காகக் கத்திய போது சீடர்கள் அவரைப் பேசாதிருக்கும்படி அதட்டிய இத்திருப்பலி நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, மூன்றுவிதக் கிறிஸ்தவர்கள் பற்றி விளக்கினார்.

இயேசுவோடு தங்களுக்கு இருக்கும் உறவு பற்றி மட்டுமே கவலைப்படும் கிறிஸ்தவர்கள், பெயரளவில் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசுவிடம் மக்களை இட்டுச்செல்லும் கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று குழுவினர் பற்றி எடுத்துச் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவோடு தங்களுக்கு இருக்கும் உறவு பற்றி மட்டுமே கவலைப்படும் கிறிஸ்தவர்கள் தன்னலவாதிகள், இவர்கள் பிறர் எழுப்பும் அழுகுரல்களைக் கேட்பதில்லை, இயேசு தங்களுக்குத் தேவைப்படும் பலரின் குரல்களை இவர்கள் கேட்பதில்லை, அதனைப் புறக்கணித்து வாழ்கின்றனர் என்று கூறினார் திருத்தந்தை.

அடுத்து, பெயரளவில் வாழும் கிறிஸ்தவர்கள் வரவேற்பு அறை கிறிஸ்தவர்கள், இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு உலகப் போக்கில் வாழ்பவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

மூன்றாவதாக, இயேசுவிடம் மக்கள் வருவதற்கு உதவும் கிறிஸ்தவர்கள், தாங்கள் நம்புவதை வாழ்பவர்கள் என்றும், இந்த மூன்று விதக் கிறிஸ்தவர்களில் நாம் எந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் என்று சிந்திக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.