2015-05-28 16:02:00

செய்தியாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமை


மே,28,2015. தகவல்களை வழங்குவதில் செய்தியாளரின் பங்கு, சனநாயக பங்கேற்பின் முக்கிய கருவிகளில் ஒன்றாக இருப்பது மட்டுமல்லாமல், மனிதக் குடும்பத்தைத் தாங்கி நிறுத்துவதற்கு அடிப்படைத் தேவையாகவும் உள்ளது என்று ஐ.நா.விலுள்ள திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் ஒருவர் கூறினார்.

“சண்டை இடம்பெறும் இடங்களில் செய்தியாளரின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

பணியில் இருக்கும்போது உயிரிழந்த செய்தியாளர்களுக்காகத் திருப்பீடம் செபிப்பதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் கூறினார் பேராயர் அவுசா.

சண்டை இடம்பெறும் இடங்களில் செய்தியாளர்களின் பணியின் முக்கியத்துவம் இக்காலத்தில் தொடர்ந்து அதிகமாகி வருகின்றது என்றுரைத்த பேராயர், செய்தியாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டினார். 

2014ம் ஆண்டில் மட்டும் 69 செய்தியாளர்கள் தங்களின் வாழ்வை இழந்துள்ளனர், மேலும் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவ்வாண்டில் 25 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.