2015-05-28 16:26:00

சட்டத்துக்குப் புறம்பே நடைபெறும் புகையிலை வர்த்தகம்


மே,28,2015. உலகிலுள்ள ஏறக்குறைய நூறு கோடி புகைப்பிடிக்கும் மக்களுள் எண்பது விழுக்காட்டினர் வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று உலக நலவாழ்வு நிறுவனமான WHO கூறியுள்ளது.

மே,31, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள WHO நிறுவனம், சட்டத்துக்குப் புறம்பே நடைபெறும் புகையிலை வர்த்தகம் தடை செய்யப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

சிறார் உட்பட குறைவான வருவாய் பெறும் மக்கள் மத்தியில் சிகரெட்டுகள் மிகவும் மலிவாக விற்கப்படுகின்றன மற்றும் அவை அம்மக்களுக்கு எளிதாகவும் கிடைக்கின்றன என்றுரைக்கும் இந்நிறுவனம், உலகில் பத்து சிகரெட்டுகளில் ஒன்று சட்டத்துக்குப் புறம்பே விற்பனை செய்யப்படுகின்றது என்று கூறியுள்ளது.

இந்நிலை நீடித்தால், புகையிலை தொடர்புடைய நோய்களால் 21ம் நூற்றாண்டில் நூறு கோடிப் பேர் இறப்பார்கள் என்றும், இவ்வெண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பத்துக் கோடியாக இருந்தது என்றும் WHO கூறியுள்ளது.

புகையிலை தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய அறுபது இலட்சம் பேர் இறக்கின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.