2015-05-28 15:49:00

அத் லிமினா சந்திப்பில் தொமினிக்கன் குடியரசு ஆயர்கள்


மே,28,2015. ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணை வாழ்வு முழுவதும் இணைக்கும் திருமணத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தைப் பேணி ஊக்குவிக்குமாறு தொமினிக்கன் குடியரசு ஆயர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினாவை முன்னிட்டு இவ்வியாழனன்று தொமினிக்கன் குடியரசு ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்குத் தான் சொல்ல விரும்பிய கருத்துக்களை எழுத்து வடிவில் வழங்கிய பின்னர் ஆயர்களோடு அமர்ந்து உரையாடினார்.

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் வாழ்வுக்குத் திறந்த மனதுடையவர்களாய், வாழ்வில் என்ன நேர்ந்தாலும், ஒருவர் மற்றவருக்காகவும், சமுதாயத்தின் நன்மைக்காகவும் திருமணத்தின்போது தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்குப் பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு ஆயர்கள் உதவுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மாறுபட்ட நிலையில் ஒன்றித்து வாழ்வதற்கும், மன்னிப்புக்கும், மன்னிப்பை அனுபவிப்பதற்கும், குழந்தைகளுக்கு நல்ல விழுமியங்களை, குறிப்பாக விசுவாசத்தை  வழங்கவும் குடும்பம் ஏற்ற இடம் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆயர்கள், தங்களின் அருள்பணியாளர்களின் உருவாக்கத்திலும், தொடர் ஆன்மீக வளர்ச்சியிலும், இயற்கையைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கரீபியன் தீவு நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாகிய தொமினிக்கன் குடியரசு, ஏறக்குறைய 300 ஆண்டுகள் இஸ்பானியக காலனியாக இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.