2015-05-27 15:37:00

இயற்கைப் பாதுகாப்பு, மதங்கள் சொல்லும் நன்னெறிக் கடமை


மே,27,2015 இயற்கையை மதிப்பதும், பாதுகாப்பதும் அனைத்து மதங்களிலும் சொல்லப்படும் நன்னெறிக் கடமை என்றும், இதையொட்டி, கிறிஸ்தவ, யூத மறைநூல்களில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகள், அறிவுரைகள் ஆகியவை, அனைத்து முக்கியமான மத நூல்களிலும் காணப்படுகின்றன என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 18, கடந்த திங்கள் முதல், மே 26, இச்செவ்வாய் முடிய ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO, ஜெனீவா நகரில் நடத்திய 68வது அவையில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.

வசதியும் வாய்ப்பும் மிகுந்த ஒரு சில தனிநபர்களும், நாடுகளும் இயற்கையின் செல்வங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி, இயற்கைச் சமநிலையைக் குலைத்து வருவதை, கடந்த ஆண்டுகளில் திருத்தந்தையர் 16ம் பெனடிக்ட் அவர்களும், பிரான்சிஸ் அவர்களும் வெளிப்படையாகக் கண்டனம் செய்துள்ளனர் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழல் சீரழிவைக் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அடிக்கடி பேசிவந்ததால், அவர், 'பசுமைத் திருத்தந்தை' என்று அழைக்கப்பட்டார் என்று கூறிய பேராயர் தொமாசி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலை மையப்படுத்தி உருவாக்கிவரும் சுற்றுமடலைக் காண, தான் காத்திருப்பதாக, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் வெளியிட்டுள்ள ஆவலையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

பெருமளவில் வருவாய் திரட்டும் முதல்தர நாடுகள், இயற்கையைப் பாதுகாக்கும் கட்டாயத்தில் உள்ளன என்பதை கத்தோலிக்கத் திருஅவையும், திருப்பீடமும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்தி வரும் என்று பேராயர் தொமாசி அவர்கள், WHO நிறுவனத்தின் 68வது அவையில், சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.