2015-05-27 15:08:00

அமைதி ஆர்வலர்கள் : 1983ல் நொபெல் அமைதி விருது (Lech Walesa)


மே,27,2015. யார் ஒருவர் வரலாற்றின் சக்கரத்தை நிறுத்துவதற்கு தனது கையை வைக்கின்றாரோ அவரின் விரல்கள் நசுக்கப்படும் என்று முழங்கியவர் போலந்து நாட்டு முன்னாள் அரசுத்தலைவர் லெக் வவென்சா. இவர், போலந்து நாட்டு சாலிடார்நோஷ் தொழிற்சங்கத்தை நசுக்க முயற்சித்த கம்யூனிச அதிகாரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்து, கம்யூனிசத்தின் கரங்களை நசுக்கி, அந்நாட்டில் மக்களாட்சி ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். இவர், போலந்தில் 1989ல் கம்யூனிசம் வீழ்ந்து 1990ல் நடைபெற்ற முதல் சனநாயகத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்து 1995ம் ஆண்டு வரை அரசுத் தலைவராகப் பணியாற்றியவர். மின்சாரத் துறையில் சாதாரண ஒரு தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கிய லெக் வவென்சா அவர்கள், மனித உரிமைகள் ஆர்வலர், பிறர் நலனுக்காக உழைப்பவர், சாலிடார்நோஷ் தொழிற்சங்கம் உருவாக துணை நின்றவர். இவரது சிறப்பான மற்றும் துணிச்சலான பணிகளைப் பாராட்டி, 1983ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. நாம் வாழ்கின்ற இவ்வுலகம், அணுப் படுகொலை அச்சுறுத்தலும், அழிவுண்டாக்கும் ஆயுதப் போட்டியும் இல்லாத இடமாக மாற வேண்டுமென்பது எனது ஒவ்வொரு நாட்டின் உரிமையாகிய சுதந்திரத்திலிருந்து அமைதி பிரிக்கப்படாமல் இருக்கட்டும் என்பதும் எனது தீராத ஆவல். இந்த எனது ஆவல் நிறைவேண்டுமென்றே செபிக்கின்றேன் என்றும் சொல்லியிருப்பவர் லெக் வவென்சா.

லெக் வவென்சா அவர்கள், 1943ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி போலந்து நாட்டின் Popowoவில் பிறந்தவர். இவரது தந்தை Bolesław ஒரு தச்சுத் தொழிலாளி. லெக் பிறப்பதற்கு முன்னரே இவரது தந்தை நாத்சிப் படைகளால் கைது செய்யப்பட்டு, Młyniec வதைப்போர் முகாமில் வைக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினாலும், வதைப்போர் முகாமில் அனுபவித்த கொடுமைகளால் நோயால் தாக்கப்பட்டு இரு மாதங்களுக்குள் இறந்தார். அப்போது அவர் 34 வயதைக்கூட எட்டவில்லை. எனவே லெக் வவென்சா அவர்களின் வாழ்வை வடிவமைத்தவர் அவரது தாய் Feliksa. தொழில் கல்வியை முடித்த லெக், 1961 முதல் 1965 வரை ஒரு தொழில் மையத்தில் வாகனங்களைப் பழுதுபார்க்கும் வேலை செய்தார். பின்னர் ஈராண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய இவர், படைப் பிரிவுத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். 1967ல், Gdansk கப்பல் கட்டும் துறைமுகத்தில் மின்சார வேலையில் சேர்ந்தார்.  1969ல் Danuta Golos என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தனர். 1970ம் ஆண்டு டிசம்பரில், Gdańsk தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொழிலாளர் தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், 1976ல் கடை மேலாளராக இவர் ஆற்றிய நடவடிக்கைகளால், வேலையிலிருந்து இவர் நீக்கப்பட்டார். எனவே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தற்காலிக வேலைகளைச் செய்து வந்தார்.

லெக் வவென்சா அவர்கள் ஆற்றி வந்த நடவடிக்கைகளுடன், 1978ல், கம்யூனிசமில்லாத சுதந்திர தொழிற்சங்கங்களை நடத்தத் தொடங்கி, கடற்கரைகளில் நடந்த பல தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதனால் அரசின் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அடிக்கடி கைது செய்யப்பட்டார். 1980ம் ஆண்டு ஆகஸ்டில் Gdansk கப்பல் கட்டும் துறைமுகத்தில், தொழிலாளர் உரிமை கோரி வேலை நிறுத்தத்தை இவர் முன்னின்று நடத்தினார். இதற்குப் பின்னர் அங்கு வேலை நிறுத்தம் அடிக்கடி நடந்தது. இதனால் அதிகாரிகள் வவென்சாவுடன் கட்டாயமாகப் பேச்சுவார்த்தையை நடத்தவேண்டியதாயிற்று. இதன்மூலம், 1980 ஆகஸ்ட் 31ம் தேதி, Gdansk ஒப்பந்தம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உரிமை மற்றும் தொழிலாளர்கள் தங்களின் தனிப்பட்ட தொழிற்சங்கத்தை நடத்த உரிமைக்கு அனுமதியளிக்கப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவையும் இந்தத் தொழிற்சங்க இயக்கத்துக்கு ஆதரவு வழங்கியது. 1981, சனவரியில் வவென்சா அவர்களை திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வத்திக்கானில் வரவேற்றார். வவென்சாவும், தனது வாழ்வுக்கு வலிமை தரும் ஊற்றாக கத்தோலிக்கத்தை எப்போதும் பார்த்தார். இவர், 1980-81ம் ஆண்டுகளில் இத்தாலி, ஜப்பான், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ILO அனைத்துலக நிறுவனத்தின் விருந்தாளியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1981, செப்டம்பரில் Gdanskல் நடந்த முதல் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் லெக் வவென்சா அவர்கள் தொழிற்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் யூனியன் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் போலந்தின் இராணுவ அதிபர் Jaruzelski, 1981 டிசம்பரில் இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதனால் போலந்தில் கொஞ்சம் இருந்த சுதந்திரமும் பறிபோனது. தொழிற்சங்கம் தடை செய்யப்பட்டது. அதன் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வவென்சா, உள்நாட்டில் ஓரிடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1982 நவம்பரில் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் Gdansk கப்பல் கட்டும் துறைமுகம் செயல்படத் தொடங்கியது. இவர் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தாலும், பிற தொழிற்சங்கத் தலைவர்களுடன் மறைவாகத் தொடர்பு வைத்துக்கொண்டார். 1983, ஜூலையில் இராணுவச் சட்டம் அகற்றப்பட்டது. ஆயினும் குடிமக்கள் மீது பல கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. 1983ம் ஆண்டு அக்டோபரில் வவென்சாவுக்கு நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டது. இதனால் மறைவாகச் செயல்பட்ட சாலிடார்நோஷ் தொழிற்சங்கத்திற்குப் புத்துயிர் கிடைத்தது. இந்த  நொபெல் அமைதி விருதுக்கு அரசு ஊடகம் எதிர்ப்பு தெரிவித்தது. 

முன்னாள் சோவியத் யூனியனில் அதிபர் மிக்கேல் கோர்பஷேவ் செய்த சீர்திருத்தங்கள், போலந்தின் பொருளாதாரச் சரிவு, மேற்குலகின் அழுத்தங்கள் போன்றவை இதனால் வவென்சா மற்றும் சாலிடார்நோஷ் தொழிற்சங்கத் தலைவர்களுடன் Jaruzelski பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாராளுமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. 1990, டிசம்பர் தேர்தலில் போலந்து குடியரசின் தலைவராக லெக் வவென்சா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹார்வர்ட், பாரிஸ் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் பல கவுரவப் பட்டங்களை வழங்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுதந்திரப் பதக்கம், நார்வே சுதந்திர உலகு பதக்கம், ஐரோப்பிய மனித உரிமைகள் விருது உட்பட பல கவுரவ விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.  

நான் தன்னிலே ஒன்றுமில்லை, அனைத்தும் இறைவனிடமிருந்தும், அன்னை மரியாவிடமிருந்தும் எனக்கு வருகின்றன என்றுரைத்துள்ள லெக் வவென்சா அவர்கள், இன்றும், மனித உரிமைகள் காக்கப்பட குரல் கொடுத்து வருகிறார், ஓரினத் திருமணத்தை எதிர்த்து வருகிறார். சோர்வும், கசப்பும், உதவியற்றதன்மையும் நம்மை ஆட்கொண்டால் நம்மால் எதுவும் செய்ய இயலாது. அமைதியைக் குலைக்கும் மூடுதிரை வீழட்டும், அமைதி பேசட்டும் என்ற லெக் வவென்சா அவர்களுடன் இணைந்து நாமும், நாட்டிலும் வீட்டிலும் உள்ளத்திலும் அமைதி நிலவ வழி அமைப்போம்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.