2015-05-27 15:53:00

57 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு - ஐ.நா. முயற்சி


மே,27,2015 ஈராக் நாட்டில் ஐந்துவயதுக்கு உட்பட்ட 57 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கும் முயற்சியை, ஐ.நா.அவையின் WHO  உலக நலவாழ்வு நிறுவனமும் UNICEF குழந்தை நல அமைப்பும் இணைந்து, இச்செவ்வாயன்று துவக்கியுள்ளன.

ஈராக் நாட்டில் மோதல்கள் தொடர்ந்தாலும், அந்நாட்டின் 90 விழுக்காட்டுக் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை வழங்கும் முயற்சியை, பல மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மேற்கொண்டுள்ளோம் என்று WHO அதிகாரி, சையத் ஜாபர் ஹுசெயின் அவர்கள் கூறினார்.

ஈராக்கில், போலியோவினால் பாதிக்கப்பட்ட குழந்தை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டதே இறுதி முறை என்றாலும், அந்நாடு, இந்நோயினால் மீண்டும் தாக்கப்படக் கூடும் என்ற காரணத்தால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று UNICEF உயர் அதிகாரி, Phillippe Heffinck அவர்கள் கூறினார்.

இன்றைய நிலவரப்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள், போலியோ நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்றும், இவ்விரு நாடுகளிலும் இந்நோயைத் தடுக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அறிக்கை மேலும் கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.