2015-05-26 16:04:00

புனித பிலிப்பு நேரி திருஅவையின் மறைப்பணிக்கு எடுத்துக்காட்டு


மே,26,2015. புனித பிலிப்பு நேரி அவர்கள், உலகில் திருஅவையின் நிரந்தர மறைப்பணிக்குச் சுடர்விடும் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் என்றும், அடுத்திருப்பவரை இப்புனிதர் அணுகிய விதம், நம் ஆண்டவரின் அன்புக்கும் கருணைக்கும் சாட்சி பகர்வதாக அமைந்திருந்தது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

புனித பிலிப்பு நேரி அவர்கள் பிறந்ததன் ஐந்நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, புனித பிலிப்பு நேரி ஆரட்டரி கூட்டமைப்பின் தலைவர் அருள்பணி Mario Alberto Avilés அவர்களுக்கு, இப்புனிதரின் விழாவான இச்செவ்வாயன்று செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

உரோம் நகரின் திருத்தூதர் என அழைக்கப்படும் புனித பிலிப்பு நேரி அவர்கள், ஆன்மாக்களின் மீட்புக்காகத் தன்னை அர்ப்பணித்து செபத்திலும், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதிலும் அதிக நேரம் செலவழித்தார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஆயர்கள், அருள்பணியாளர்கள், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர், பொது நிலையினர் என எல்லாருக்கும் இப்புனிதர் எடுத்துக்காட்டாய் உள்ளார் என்றும், இப்புனிதர் ஆரம்பித்த ஆரட்டரி சபையினர் செப மனிதர்களாகவும், மக்களைக் கிறிஸ்துவிடம் ஈர்ப்பதற்குச் சான்று வாழ்வு வாழ்பவர்களாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் 1515ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்த புனித பிலிப்பு நேரி அவர்கள், உரோமையில் மறைப்பணியாற்றி 1595ம் ஆண்டு மே 26ம் தேதி இறந்தார். இவர் உருவாக்கிய சபையினர் செபக்குழுவினர் அதாவது ஆரட்டோரியன்ஸ் என அழைக்கப்படுகின்றனர். 

புனித பிலிப்பு நேரி அவர்கள் பிறந்ததன் ஐந்நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இச்சபையினர் தொடங்கியுள்ள ஜூபிலி ஆண்டு 2016ம் மே 26ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.