2015-05-26 16:04:00

படகு மக்களுக்கு இரக்கமும் கருணையும் காட்டப்பட வேண்டும்


மே,26,2015. தென்கிழக்கு ஆசியக் கடல்களில் விவரிக்க முடியாத அளவில் கடும் துன்பங்கள் இடம்பெறுகின்றன; மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் வறுமையாலும், சண்டையாலும் பாதிக்கப்பட்டு குடிபெயரும் மக்கள் கடல்களில் தத்தளிக்கின்றனர் என்று மியான்மார் கர்தினால் கவலை தெரிவித்தார்.

பழிபாவங்களுக்கு அஞ்சாத மனித வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் மக்கள், பாதுகாப்பற்ற மற்றும் பழைய கப்பல்களில் கடல்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்  என்றுரைத்த யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் போ அவர்கள், புத்தரின் பூமியாகிய மியான்மாரில் இந்த மக்கள்மீது இரக்கமும் கருணையும் காட்டப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

மியான்மாரின் Rohingya இன மக்கள்,  தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் புகலிடம் தேடுவது தொடர்ந்துவரும்வேளை, மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் படகு மக்கள், மனித மாண்பு மற்றும் பாதுகாப்பைத் தேடி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர் என்று கூறினார் கர்தினால் போ.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், இந்தப் படகு மக்களுக்காக அனைத்துலக சமுதாயத்தை விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.