2015-05-26 16:01:00

திருத்தந்தை - கிறிஸ்தவம் ஆணிவேர் போன்ற ஒரு தேர்வு


மே,26,2015. இயேசுவையும் இவ்வுலகப் பொருள்களையும் ஒன்றாகப் பின்செல்ல விரும்பும் கிறிஸ்தவர்களைப் பார்ப்பது துன்பம் தருகின்றது, ஒரு கிறிஸ்தவர் தனது வாழ்வில் ஆணிவேர் போன்ற ஒரு தேர்வு செய்வதற்கு அழைக்கப்படுகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவைப் பின்செல்லும் தனக்கும், மற்ற சீடர்களுக்கும் என்ன கைம்மாறு கிடைக்கும் என்று திருத்தூதர் பேதுரு இயேசுவிடம் கேட்ட நற்செய்திப் பகுதி பற்றி இச்செவ்வாய் காலை திருப்பலி மறையுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கிறிஸ்தவர் பாதிக் கிறிஸ்தவராக அல்லது, ஒரே சமயத்தில் விண்ணையும் மண்ணையும் கொண்டிருப்பவராக வாழ முடியாது என்று கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, தம்மைப் பின்செல்கிறவர்களுக்குச் சிலுவையும், அடக்குமுறைகளும் கிடைக்கும் என்று இயேசு கூறுவதையும் குறிப்பிட்டார்.

ஒரு கிறிஸ்தவர் உலகப் பொருள்கள்மீது பற்றுக் கொண்டிருக்கும்போது, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் கொண்டிருக்க விரும்பும் மோசமானவராக வெளிப்படுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

செல்வங்கள், தற்பெருமை, பகட்டு, போலித்தனம் போன்றவை இயேசுவிடமிருந்து நம்மைத் தூர ஒதுக்கி விடும், செல்வம் மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அவை உடனடியாக ஒருவரை வீண் தற்பெருமைக்கு உட்படுத்தி தன்னையே மிகவும் முக்கியமானவராக நினைக்க வைக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவைப்  பின்செல்தல் என்பது தொண்டு புரிவதாகும் என்றும், சேவையின் அறிவியலை, மனத்தாழ்மையின் அறிவியலை, திருஅவையில் சகோதர சகோதரிகளுக்கு பணிபுரியும் அறிவியலைக் கற்றுத் தருமாறு இயேசுவிடம் கேட்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.