2015-05-26 15:53:00

ஏழ்மையை அகற்ற ஏழை நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மே,26,2015. உலகில் மிகவும் வறிய நாடுகளுக்கு, ஏழ்மையை அகற்றுவதில் 2015ம் ஆண்டு மிக முக்கிய ஆண்டாக அமைந்துள்ளது என்று இச்செவ்வாயன்று வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.

2030ம் ஆண்டுக்குள் உலகில் ஏழ்மையை அகற்றுவதற்கான உலகளாவிய இலக்கை நிறைவேற்றுவதற்கு பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்குச் செய்யும் உதவிகளை அதிகரிக்க வேண்டுமென்று, உலகில் ஏழ்மை ஒழிப்பு மற்றும் நோய் தடுப்புக்காக முயற்சிக்கும் ONE என்ற அரசு-சாரா அனைத்துலக அமைப்பு கேட்டுள்ளது.   

அதேநேரம், மிகக் குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் அடிப்படை மற்றும் கல்வி வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வமைப்பு பரிந்துரைத்துள்ளது.   

மிகவும் குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான உதவிகள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அது அதிகரிக்கப்படாமல், 2030ல் கடுமையான வறுமையை ஒழிப்பதற்கான புதிய உலக இலக்கை எட்ட முடியாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

உதவி செய்யும் நாடுகள் தங்களின் உதவிகளை அதிகரிக்குமாறும், பிரிட்டன், டென்மார்க், நார்வே, சுவீடன், லக்சம்பர்க் ஆகிய நாடுகளே ஐ.நா.வால் நிர்ணயிக்கப்பட்ட உதவித் தொகையை வழங்கியுள்ளன என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : Reuters / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.