2015-05-25 15:28:00

திருத்தந்தை : செல்வம் மீதான ஆசை, ஊழலுக்கு வித்தாகிறது


மே,25,2015. பகிர்ந்துகொள்ளப்படாத சொத்துக்களே ஊழலைப் பிறப்பிக்கின்றன என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரிடம் இருக்கும் செல்வம் பொது நலனுக்கு பயன்படுவதாக இருக்கவேண்டும்; மாறாக, அது தன்னல வழிகளில் மேலும் மேலும் சேர்க்கப்பட்டால், ஊழலுக்கே வழிவகுக்கும் என குறிப்பிட்டார்.

இறைவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடித்து வாழும் பணக்கார இளைஞர் ஒருவர் தன்னைப் பின்தொடர விரும்பியபோது, அவரை நோக்கி இயேசு, அவருக்குரிய அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, தன்னை பின் தொடரக் கூறியதையும், அந்த இளைஞர் அதை விரும்பாமல் மனவருத்தத்துடன் சென்றதையும் குறித்து இன்றைய மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

செல்வத்தின் மீது நாம் வளர்த்துக்கொள்ளும் ஆசையே, அனைத்து விதமான ஊழலுக்கும் வித்தாக உள்ளது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செல்வம் மிக்கவர்கள் இந்த உலகத்திலேயே சுவர்க்கம் உள்ளது என்ற தப்பான தோற்றத்தைக் கொடுத்து வாழ்கின்றனர், ஆனால்  அவர்கள் வாழ்வு நம்பிக்கையற்றதாகவும், வைகறை விடியல் அற்றதாகவும் உள்ளது  என்றார்.

தாராள குணமற்ற செலவந்தர்கள், தங்களை அனைத்து சக்திகளையும் கொண்ட கடவுள்போல் எண்ணிக்கொள்கின்றனர், ஆனால் இறுதியில் அவர்கள் இழப்பது மிகவும் உன்னதமான நம்பிக்கையை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் கைகளை திறக்காதபோது, நம் இதயங்களும் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தேவையிலிருப்போர்மீது நம் கருணைப் பார்வை விழவில்லையெனில், நாமும் அந்த பணக்கார இளைஞரைப்போல், கடவுளைவிட்டு விலகிச் செல்பவர்கள் ஆவோம் என மேலும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.