2015-05-25 15:46:00

திருத்தந்தை - தூய ஆவியாரின் வருகையைத் தடுப்பது பாவம்


மே,25,2015 சுயநலத்தால் தங்களை மூடிக்கொள்ளாமல், திறந்த மனதுடன், தூய ஆவியாரைத் தங்களுக்குள் நிறைத்துக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் இவ்வுலகிற்கு இன்று அதிகம் தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மே 24, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட தூய ஆவியார் வருகைப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

தூய ஆவியாரின் வருகையைத் தடுக்கும்வண்ணம், ஒருவர் தன் இதயத்தை மூடிக் கொள்வது, சுதந்திரத்தை இழப்பது மட்டுமல்ல, மாறாக, அதுவே பாவம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

'ஆண்டவரே, உம ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்' என்று பதிலுரைப் பாடலில் நாம் கூறியபோது, படைப்பின்மீது நாம் காட்டவேண்டிய மதிப்பு, நமது விசுவாசத்தின் அடிப்படைக் கூறு என்பதை நமக்கு உணர்த்தியது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலாத்தியர் 5:22) ஆகிய கொடைகளோடு, துணிவு, தளரா மனம், விடாமுயற்சி ஆகிய கொடைகளும் இன்றைய உலகில் வாழ்வதற்கு நமக்குத் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பாவத்தோடும், ஊழலோடும் சமரசம் செய்துகொள்ளாமல், தொடர்ந்து போராடவும், நீதியையும், அமைதியையும் நிலைநாட்டும் பணிகளை, தளரா மனதுடன் தொடரவும், தூய ஆவியார் நமக்கு வரமருள வேண்டுமென்ற வேண்டுதலோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.