2015-05-25 16:15:00

கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி


மே,25,2015 கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும் ஒப்புரவு ஆகியவற்றை மையப்படுத்தி கூடியிருக்கும் உங்களுடன், நானும் இதயத்தால் ஒன்றியிருக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு காணொளிச் செய்தியை அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அனுப்பினார்.

மே 23, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரில் இடம்பெற்ற ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய ஒலி, ஒளி வடிவச் செய்தி ஒளிபரப்பானது.

தன்னால் ஆங்கிலத்தில் சரிவரப் பேசமுடியாது என்ற காரணத்தால், தன் செய்தியை இஸ்பானிய மொழியில் அனுப்புவதற்காக தன்னை மன்னிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் இச்செய்தியைத் துவக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் பேசுவது இதயத்தின் மொழி என்பதையும் உடனடியாகக் கூறினார்.

கிறிஸ்துவின் உடலான திருஅவையில் பிரிவுகள் இருப்பது, அவ்வுடலைக் காயப்படுத்துகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிவுகளை வளர்க்க சாத்தான் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வென்று, பிரிவு என்ற காயத்தை நாம் குணப்படுத்த வேண்டும் என்று தன் செய்தியில் விண்ணப்பித்தார்.

எவஞ்செலிகல், ஆர்த்தடாக்ஸ், லூத்தரன், கத்தோலிக்கர் என்று பல்வேறு பெயர்களுடன் பிரிந்திருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும், இன்றைய உலகில் இரத்தம் சிந்துகிறோம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாம் சிந்தும் இரத்தம், கிறிஸ்தவ ஒன்றிப்பின் இரத்தம் என்பதைத் துணிவுடன் பறைசாற்றமுடியும் என்று எடுத்துரைத்தார்.

நம்மிடம் உள்ள இறையியல் அறிஞர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பைக் கொணரமுடியாது; மாறாக, நம் மனங்களில் குடிகொள்ளும் தூய ஆவியாரே நம் அனைவரையும் கிறிஸ்தவ ஒன்றிப்பில் இணைப்பார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஒலி, ஒளி வடிவச் செய்தியில் வலியுறுத்திக் கூறினார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.