2015-05-23 14:52:00

கடுகு சிறுத்தாலும் – கத்தியின்றி, இரத்தம் சிந்தி...


எல் சால்வதோர் நாடு உள்நாட்டுப் புரட்சியில் சிக்கித் தவித்த காலத்தில், 1977ம் ஆண்டு, அந்நாட்டுத் தலைநகரான சான் சால்வதோரில் பேராயராகப் பொறுப்பேற்றவர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள். அம்மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருள் பணியாளர்களும், துறவியரும், நடந்துவந்த புரட்சியை பல்வேறு வழிகளில் புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளில் தீர்வு காணவும் முற்பட்டனர்.

தனது மறைமாவட்ட அருள் பணியாளர் ஒருவரை, பேராயர் ரொமேரோ அவர்கள் சந்தித்தபோது, அவர் எப்போதும் தன்னுடன் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார் என்பதை அறிந்து, பேராயர் அதிர்ச்சி அடைந்தார். துப்பாக்கியைச் சுமந்து செல்லும் அவருக்கும், அரசின் 'மரணப்படை' வீரர்களுக்கும் வேறுபாடு இல்லை என்று பேராயர் கூறினார். அந்த குரு விடைபெற்றுச் செல்லும் வேளையில், பேராயர் அவரிடம், "நீங்கள் இன்னும் செபிக்கிறீர்களா?" என்று கேட்டார். "நிச்சயமாக செபிக்கிறேன்" என்று அவர் பதில் சொன்னதும், "பிறகு, என் இந்தத் துப்பாக்கியைச் சுமந்து திரிகிறீர்கள்?" என்று கேட்டார், பேராயர் ரொமேரோ.

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் பாடிச் சென்றார். ஆனால், கத்தியின்றி, அதே நேரம் இரத்தம் சிந்தி, தீயசக்திகளுக்கு எதிரான யுத்தத்தை, இயேசு நடத்தினார் என்று விவிலியம் சொல்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.