2015-05-23 15:04:00

அருளாளராக உயர்த்தப்பட்ட பேராயர் ரொமேரோ - ஞாயிறு சிந்தனை


1979ம் ஆண்டு, மத்திய அமெரிக்காவின் ஒரு சிறு நாட்டின் தலைநகரில், இரவு நேரத்தில், கார் ஒன்று ஊரைச் சுற்றி வந்தது. ஊரில் இருந்த ஒவ்வொரு குப்பைத் தொட்டிக்கும் அருகே அந்தக் கார் நின்றது. குப்பைத் தொட்டிகளில் யாரும், பிணமாகவோ, அல்லது இறக்கும் நிலையிலோ கிடக்கின்றனரா என்று காரின் உரிமையாளர் தேடினார். அவர் அவ்விதம் தேடி வந்தவர்கள், அந்நாட்டு அரசின் 'கொலைப்படை'யால் சித்திரவதை செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள். குப்பைத் தொட்டிகளில் குற்றுயிராகவோ, பிணமாகவோ கிடப்பவர்களை தன் காரில் ஏற்றிக்கொண்டார். அந்தக் கார், நேராக, அவ்வூரின் ஆயர் இல்லத்திற்குச் சென்றது. ஏறத்தாழ, ஒவ்வொரு இரவும் இந்தத் தேடல் நடந்து வந்தது.

அந்தக் காரின் உரிமையாளர், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள். எல் சால்வதோர் நாட்டின் தலைநகர், சான் சால்வதோரில் 1977ம் ஆண்டு, பேராயராகப் பொறுப்பேற்று, 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி கொல்லப்பட்ட பேராயர் ரொமேரோ அவர்கள், மே 23, இச்சனிக்கிழமை, அருளாளராக உயர்த்தப்பட்டார். திருஅவையால், அருளாளர் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் ரொமேரோ அவர்கள், கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் மனம் என்ற பீடத்தில் ஏற்றி வணங்கப்பட்டு வருபவர்.

அருளாளர் Óscar Arnulfo Romero y Galdámez அவர்களை மையப்படுத்தி, இன்றைய ஞாயிறு சிந்தனையை மேற்கொள்வோம். பேராயர் ரொமேரோ அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தால், அவர் தன் வாழ்க்கையில் கடந்துவந்த ஒரு சில மைல்கற்களை, குறிப்பாக, அவர் வாழ்வின் இறுதி மூன்று ஆண்டுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1917ம் ஆண்டு பிறந்த ஆஸ்கர் அவர்கள், தன் 25வது வயதில் அருள்பணியாளராகவும், 53வது வயதில் ஆயராகவும் அருள்பொழிவு பெற்றவர். 1977ம் ஆண்டு, தன் 60வது வயதில், சான் சால்வதோர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக அவர் நியமனம் பெற்றபோது, அந்நகரின் செல்வந்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேராயர் ரொமேரோ அவர்கள், கோவில், மதம் சார்ந்த பணிகளை மட்டுமே ஆற்றுவார், சமுதாயப் பிரச்சனைகளில் தலையிடமாட்டார் என்று அவர்கள் எண்ணியதால் மகிழ்ந்தனர்.

1970, 80களில், எல் சால்வதோர் நாட்டில் நிகழ்ந்த அக்கிரமங்கள், குறிப்பாக, செல்வம் நிறைந்த கத்தோலிக்கர்களால் வறியோர் அடைந்த இன்னல்கள் ஏராளம். இந்த சமுதாய அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், அரசின் 'மரணப்படை'யால் (death squad) கொன்று குவிக்கப்பட்டனர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் ஆதரவும், நிதி உதவியும் இருந்ததால், இந்தக் மரணப்படையின் அக்கிரமங்கள் அத்துமீறிச் சென்றன.

சான் சால்வதோர் நகரில், 1965ம் ஆண்டு முதல், 'மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழக'த்தை (Central American University) நடத்திவந்த இயேசு சபையினர், நாட்டில் நிலவும் அநீதியை எதிர்த்து குரல் எழுப்பி வந்தனர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இருப்பினும், அவர்கள் துணிவுடன் தங்கள் சமூகநீதிப் பணிகளைத் தொடர்ந்தனர்.

ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் பேராயராக நியமனம் பெற்றபோது, இயேசு சபையினர் மனம் உடைந்துபோயினர். அவர்களைப் பொருத்தவரை, பேராயர் ரொமேரோ அவர்கள், நாட்டில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கமாட்டார் என்று எண்ணியதால், இந்த மனநிலை அவர்களுக்குள் உருவானது.

அப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றி, பின்னர், வறுமைப்பட்ட விவசாயிகள் நடுவில் உழைத்துவந்த இயேசு சபை அருள் பணியாளர், ருத்திலியோ கிராந்தே கார்சியா (Rutilio Grande García) அவர்கள், பேராயர் ரொமேரோ அவர்களின் நெருங்கிய நண்பர். சமுதாய நீதி குறித்து இருவருக்கும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதுண்டு.

அருள்பணி கிராந்தே அவர்கள் மேற்கொண்டிருந்த சமூக நீதிப் போராட்டத்திற்கு விலையாக, அவர், 1977ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி கொல்லப்பட்டார். கொலையுண்டு கிடந்த நண்பர் கிராந்தேயின் சடலத்திற்கு முன், பேராயர் ரொமேரோ அவர்கள் மனம் மாறினார். தன் நண்பர் கிராந்தேயின் அடக்கச் சடங்கில் பேராயர் ஆற்றிய மறையுரை, எல் சால்வதோர் நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது. அரசு அதிகாரிகளும் செல்வந்தர்களும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். வறியோரோ அந்த மறையுரையைக் கேட்டு, ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். அருள்பணி கிராந்தே அவர்களுக்குப் பதிலாக, தங்கள் சார்பில் போராட பேராயர் ரொமேரோ அவர்கள் கிடைத்ததை எண்ணி, வறியோர், ஆனந்தத்தில் திளைத்தனர்.

அருள்பணி ருத்திலியோ கிராந்தே அவர்களின் கொலையை, அரசு தீர விசாரிக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட பேராயர் ரொமேரோ அவர்கள், தகுந்த விசாரணை முடியும்வரை அரசு நடத்தும் எந்த விழாவிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்தார். அருள்பணி கிராந்தே அவர்களின் அடக்கத் திருப்பலியில், ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் கலந்துகொண்ட நேரத்தில், பேராயர் ரொமேரோ அவர்கள், நாட்டில் நீதியும், அமைதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்றும், அரசு தன் ஆயுதங்களைக் களையவேண்டும் என்றும் தன் மறையுரையில் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

பேராயர் ரொமேரோ அவர்களிடம் நிகழ்ந்த இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, அருள் பணியாளர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், கோவில் ஊழியர்கள் பலர், வரிசையாகக் கொல்லப்பட்டனர். இருப்பினும், பேராயர் தன் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்தி வந்தார். அதுவரை எந்த ஓர் ஆயரும் செய்யத் துணியாத ஒரு செயலை பேராயர் ரொமேரோ அவர்கள் செய்தார். அதாவது, எல் சால்வதோர் அரசுத் தலைவர்  செய்த தவறை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து நடந்த கொலைகளையடுத்து, பேராயர் ரொமேரோ அவர்கள், இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். அரசாலும், செல்வந்தராலும் வேட்டையாடப்பட்ட வறியோருக்குப் பாதுக்காப்பு தரும் புகலிடமாக, மறைமாவட்டத்தின் குருமாணவர் இல்லத்தின் கதவுகளைத் திறந்துவைத்தார். நூற்றுக்கணக்கான வறியோர் அங்கே தஞ்சம் அடைந்தனர்.

சான் சால்வதோரில் எழுப்பப்பட்டு வந்த புதிய பேராலயத்தின் பணிகளை உடனடியாக நிறுத்தச் சொன்னார். ‘உள்நாட்டுப் போர் முடியட்டும்; ஏழைகள் வயிறு நிறையட்டும்; குழந்தைகள் நல்ல கல்வி பெறட்டும்... பின்னர், நமது பேராலயத்தைக் கட்டுவோம்’ என்று பேராயர் ரொமேரோ அவர்கள் தெளிவாகக் கூறினார். அவர் எடுத்த இந்த இரு முடிவுகளும் தலத்திருஅவையின் புரட்சியை இன்னும் ஆழப்படுத்தின.

பேராயர் ரொமேரோ அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களும், அவர் முன்னின்று நடத்திய புரட்சியும், கண்ணுக்குக் கண் என்ற பழிவாங்கும் மாற்றமோ, புரட்சியோ அல்ல. ஏழைகள் சார்பில் போராட அவர் முடிவெடுத்தப் பின்னரும், அவர் வறியோரையும், செல்வர்களையும் சமமாக அரவணைக்க முயன்றார். வறியோரும், செல்வர்களும் ஒருவர் மீது ஒருவர் காட்டிவந்த வெறுப்பையும், வன்முறைகளையும் தன் மறையுரைகளில் கண்டனம் செய்தார்; அவர்களைக் கடிந்துகொண்டார்.

தனது மறைமாவட்டக் குரு ஒருவரை பேராயர் சந்தித்தபோது, அவர் தன்னுடன் எப்போதும் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார் என்பதை அறிந்து, பேராயர் அதிர்ச்சி அடைந்தார். துப்பாக்கியைச் சுமந்து செல்லும் அவருக்கும், அரசின் 'கொலைப்படை' வீரர்களுக்கும் வேறுபாடு இல்லை என்று பேராயர் கூறினார். அந்த குரு விடைபெற்றுச் செல்லும் வேளையில், பேராயர் அவரிடம், "நீங்கள் இன்னும் செபிக்கிறீர்களா?" என்று கேட்டார். "நிச்சயமாக செபிக்கிறேன்" என்று அவர் பதில் சொன்னதும், "பிறகு, என் இந்தத் துப்பாக்கியைச் சுமந்து திரிகிறீர்கள்?" என்று கேட்டார், பேராயர். பேராயர் ரொமேரோ அவர்களைப் பொருத்தவரை, பெரிய வெள்ளியும், உயிர்ப்பு ஞாயிறும் இறையரசின் பாதைகளே தவிர, பழிக்குப் பழியும், துப்பாக்கியும் இறையரசைக் கொணராது என்பதை தீர்க்கமாக நம்பினார்.

கனடா நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரி, மேரி ஜோ லெட்டி (Mary Jo Leddy) என்ற எழுத்தாளர் கூறியுள்ள ஒரு கருத்து, பேராயர் ரொமேரோ அவர்களுக்கு வெகுவாகப் பொருந்தும் என்பதை உணரலாம். "அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு சமுதாயத்தில், உடலால் இறப்பதற்கு முன், தங்களுள் தாங்களே இறந்துவிடும் மனிதர்கள் தேவை. அவர்கள் தங்கள் மரணத்திற்கு முன்னதாகவே உயிர்ப்பை வாழ்பவர்கள்" என்பது அருள் சகோதரி லெட்டி அவர்களின் கருத்து.

பேராயர் ரொமேரோ அவர்களின் உயிரை ஒரு துப்பாக்கி குண்டு பறிப்பதற்கு முன், மரணத்தைப் பற்றிய அச்சம் அவரைவிட்டு நீங்கியிருந்தது; உயிர்ப்பின் நம்பிக்கை அவரை வெகுவாக ஆட்கொண்டிருந்தது. தான் எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்ற எண்ணம், அவருக்கு, துணிவையும், அதேநேரம், இறைவன் பேரில் அளவற்ற நம்பிக்கையையும் தந்தது. 1980ம் ஆண்டு மார்ச் மாதம், பேராயர் ரொமேரோ அவர்கள், ஹோசே கால்தெரோன் (Jose Calderon Salazar) என்பவருக்கு எழுதிய ஒரு மடலில், பின்வரும் பகுதியைக் காணலாம்:

"அடிக்கடி எனக்குக் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஒரு கிறிஸ்தவனான என்னால், உயிர்ப்பு இல்லாத மரணத்தை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவர்கள் என்னைக் கொன்றால், நான் சால்வதோர் மக்களில் மீண்டும் உயிர்பெற்று எழுவேன். இதை நான் தற்பெருமையோடு சொல்லவில்லை; மாறாக, அதிகப் பணிவுடன் சொல்கிறேன்... எல் சால்வதோரின் உயிர்ப்பிற்காக என் இரத்தத்தைக் காணிக்கையாக்குகிறேன்... ஓர் ஆயர் இறப்பார்; ஆனால், மக்களைக் கொண்டு உருவான இறைவனின் திருஅவை என்றும் அழியாது."

1980ம் ஆண்டு, மார்ச் 23, ஞாயிறன்று, பேராயர் ரொமேரோ அவர்கள் வழங்கிய மறையுரை, வரலாற்றில் தனியிடம் பிடித்துள்ளது. அதுவே, பேராயர் வழங்கிய இறுதி மறையுரை என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று பேராயர் ரொமேரோ அவர்கள் ஆற்றிய மறையுரை, வானொலி வழியே நாடெங்கும் செல்வதை உணர்ந்த பேராயர் ரொமேரோ அவர்கள், ஆயுதம் தாங்கி, மக்களை வதைத்துவந்த மரணப்படை வீரர்களுக்கு தன் மறையுரையின் இறுதியில், ஒரு சிறப்பான அறிவுரை வழங்கினார்:

“சகோதர வீரர்களே, இந்நாட்டு மக்கள் மத்தியில்தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். மக்களைக் கொல்லும்படி உங்களுக்குத் தரப்படும் எந்த ஆணையும், இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற அந்த கட்டளைக்கு உட்பட்டதே. இறை கட்டளையை மீறி, உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்குக் கீழ்படிவதைவிட, உங்கள் மனசாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு திருஅவை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால், நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அடக்குமுறையை உடனடியாக நிறுத்துங்கள்.” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

பேராயர் ரொமெரோ அவர்கள் கூறிய சொற்கள், எடுத்துரைத்த உண்மைகள் மிகவும் கசந்திருக்க வேண்டும். அதனால், அவர் அந்த மறையுரையை வழங்கியதற்கு அடுத்த நாள், மார்ச் 24ம் தேதி, பேராயர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது, மரணப்படையைச் சேர்ந்த ஒரு கூலியாள், கோவிலின் பின்புறம் வந்து, குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து, பலியானார் பேராயர் ரொமேரோ.

இருபதாம் நூற்றாண்டில் மனித சமுதாயத்தை நல் வழி நடத்திய பல தலைவர்களில் ஒருவராக பேராயர் ரொமேரோவைக் கருதுகின்றனர். பேராயர் ரொமேரோ ஓர் இறைவாக்கினர். இறைவனின் வார்த்தையை, அது கூறும் உண்மைகளைக் கலப்படமில்லாமல், எவ்வித அலங்காரமும் இல்லாமல் எடுத்துச் சொன்னவர். மனித வரலாற்றில் பல்லாயிரம் இறைவாக்கினர்கள் இதையேச் செய்தனர். உண்மையைச் சொன்னார்கள், உயிரைத் தந்தார்கள். உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு.

உண்மை கசக்கும், உண்மை எரிக்கும், உண்மை சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மையின் பின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும்போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை விடுவிக்கும். உண்மை மீட்பைத்  தரும். உண்மை தரும் சங்கடத்தை சமாளிக்க முடியாமல், பல நேரங்களில் உண்மையை மறைத்துவிட, அழித்துவிட முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் உண்மை பேசும் இறைவாக்கினர்களின் முயற்சிகளைப் பல வகைகளில் நிறுத்த முயன்று, எல்லாம் தோல்வி கண்ட பின் இறுதியில் அந்த இறைவாக்கினரின் வாழ்வையே நிறுத்த வேண்டியதாகிறது.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் இன்று கொண்டாடுகிறோம். அந்த ஆவியானவரின் ஒரு முக்கிய பணியாக இயேசு தன் சீடர்களுக்குக் கூறுவது இதுதான்:

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். (யோவான் 16:13)

தூய ஆவியாரின் வழி நடத்துதலால் உண்மைகளை உணர்ந்த, உண்மைகளைப் பகர்ந்த இறைவாக்கினர்கள், சராசரி மனிதர்கள் அல்ல. கூட்டத்தோடு சேர்ந்து கோஷம் போடுபவர்கள் அல்ல. தனித்து நின்று, இறையரசின் உண்மைகளை அச்சமின்றி முழங்குபவர்கள். அருளாளர் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ அவர்கள் 80களில் இறைவார்த்தையை முழங்கினார். குண்டடிபட்டு இறந்தார்.

உண்மையின் ஆவியானவர், நம்மையும், நாம் வாழும் உலக சமுதாயத்தையும் முழு உண்மை நோக்கி வழிநடத்த, அருளாளராக உயர்த்தப்பட்டுள்ள மறைசாட்சி ரொமேரோ அவர்களின் பரிந்துரை வழியாக, மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.