2015-05-22 15:43:00

சிறாரை அச்சுறுத்தும் ஆண்டு 2015, ஐ.நா. எச்சரிக்கை


மே,22,2015. அவசரகால நெருக்கடிச் சூழல்களில் வாழும் சிறாரின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் உள்ளதால், அச்சூழல்களில் வாழ்கின்ற இலட்சக்கணக்கான சிறாருக்கு மனிதாபிமான நிதி உதவிகள் தேவைப்படுகின்றன என்று, உலகக் கல்வி குறித்த ஐ.நா. சிறப்புத் தூதர் அறிவித்தார்.

2015ம் ஆண்டு சிறாருக்கு அச்சத்தையூட்டும் ஆண்டாக இருக்கின்றது என்றும், 1945ம் ஆண்டுக்குப் பின்னர், புலம்பெயர்ந்துள்ள சிறாரின் எண்ணிக்கை, இந்த 2015ம் ஆண்டில்  மிக அதிகமாக உள்ளது என்றும் உரைத்த ஐ.நா. சிறப்புத் தூதர் Gordon Brown அவர்கள், பிரச்சனைகளை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு பள்ளிகள் உதவுமாறு கேட்டுள்ளார்.

போர்கள் இடம்பெறும் சிரியா, துருக்கி, லெபனான், ஜோர்டன், ஈராக், புருண்டி, தென் சூடான், வட நைஜீரியா மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம் ஆகிய இடங்களில் பாதிக்கப்படும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் Gordon Brown.

உலகில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள 3 கோடியே 80 இலட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறார். அதேபோல், உலகின் 1 கோடியே 67 இலட்சம் புலம்பெயர்ந்துள்ள மக்களில் சிறாரும் உள்ளனர் என்ற புள்ளி விபரங்களையும் குறிப்பிட்டார் Gordon Brown.

அதோடு ஆண்டுதோறும், 8 இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் மனித வர்த்தகத்துக்கு பலியாகின்றனர். 86 இலட்சம் சிறார் அடிமைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 50 இலட்சம் சிறுமிகள் 15 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். ஏறக்குறைய 16 கோடியே 80 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர் போன்ற விபரங்களையும் அறிவித்தார் ஐ.நா. சிறப்புத் தூதர் Gordon Brown.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.