2015-05-22 15:38:00

கடுகு சிறுத்தாலும் : பதட்டமும் ஆர்வமும் கவனத்தை சிதறடிக்கும்


மருத்துவக் கல்லூரியில் புதிய ஆண்டு துவக்கம். அனைத்து புது மாணவர்களும் அவர்களது முதல் உடல் கூறு வகுப்பிற்காக பிரேதப் பரிசோதனை அறையில் குழுமி இருந்தனர். ஒவ்வொருவரிடமும் அளவிட முடியாத பதற்றமும், எல்லாம் ஒழுங்காக கற்றுக்கொள்ள வேண்டுமே என்ற ஆர்வமும் காணப்பட்டது. எல்லாரும் கையுறை அணிந்திருந்தனர். பேராசிரியர் வந்து 'வணக்கம் எனதினிய மாணவர்களே! இந்த பரிசோதனைச் சாலையில் முதல் பாடம் ‘அருவெறுப்பு ஏதுமின்றி இருக்கப் பழகுவது’. எடுத்துக்காட்டாக, இதோ இங்கே இருக்கும் இறந்த உடலின் கெட்ட திசுவை என் விரலால் தொட்டு.....' என்றபடி தன் ஒரு விரலால் உடலைத் தொட்டு சட்டென தன் கையை எடுத்து விரலை வாயில் வைத்துக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த சில மாணவர்களுக்கு வாந்தியே வந்துவிட்டது. 'சரி. எங்கே இப்போது நீங்கள் எல்லாம் இதே போல செய்யுங்கள். பார்க்கலாம்' என்றார். சில மாணவர்கள் தயங்கி நின்றாலும், ஆர்வக் கோளாறினால் ஒரு சிலர் மனதை திடப்படுத்திக் கொண்டு பேராசிரியர் போலவே, இறந்த அந்த உடலைத் தொட்டு தங்கள் வாயில் கை வைக்கப் போகும்போது ஆசிரியர் அவர்களை நோக்கி,  'நிறுத்துங்கள். உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்கவில்லை. நான் இறந்த உடலைத் தொட்டது என் ஆள்காட்டி விரலால், ஆனால் வாயில் வைத்துக் கொண்டது என் நடு விரலை....எனவே எப்போதும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனியுங்கள்' என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.