2015-05-21 15:35:00

திருத்தந்தை - பிளவுபடுத்தும் தீயசக்திகள் திருஅவையிலும் உள்ளன


மே,21,2015 திருஅவை, தன்னோடும், இறைவனோடும் ஒன்றித்திருக்க, கிறிஸ்து வழங்கிய விலை அவரது காயங்கள் என்றும், அனைத்து பிரிவுகளுக்கும், பொறாமைக்கும் எதிராக செபிக்கும்படி கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தன் சீடர்கள் ஒன்றித்திருக்க இறுதி இரவுணவின் வேளையில் கிறிஸ்து எழுப்பிய செபத்தை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரையில் ஒற்றுமைக்கு எதிராக நாம் சந்திக்கும் சோதனைகள் குறித்தும் கூறினார்.

"அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்" (யோவான் 17:20) என்று இயேசு மன்றாடுவது, நமக்குப் பெரும் நம்பிக்கை தரும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன என்று திருத்தந்தை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

உலகைப் பிளவுபடுத்தும் பல தீய சக்திகள் திருஅவைக்குள்ளும் இருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முற்சார்பு எண்ணங்களால் மக்களை வகைப்படுத்துதல், புறம்பேசுதல், போன்ற சோதனைகள் நம்மை எப்போதும் சூழ்ந்துள்ளன என்று கூறினார்.

திருஅவையின் ஒன்றிப்பு என்பது எந்த ஒரு பசையாலும் உருவாவது கிடையாது என்று நகைச்சுவை உணர்வுடன் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிப்பு என்பது, இறைவனின் அருள் என்றும், அது இவ்வுலகில் பல இன்னல்கள், தடைகளுக்கு இடையே மீண்டும் மீண்டும் உருவாக்கப்படவேண்டிய கடமை என்றும் தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

மேலும், "கடவுள் மௌனமாய் இருப்பதுபோன்ற நேரங்கள் உண்டு; அறையுண்ட கிறிஸ்துவை நாம் கூர்ந்து நோக்கினாலே தவிர, கடவுளின் இந்த மௌனத்தைப் புரிந்துகொள்ள இயலாது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக, ஒன்பது மொழிகளில் இவ்வியாழன் வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.