2015-05-21 16:33:00

ஒவ்வொரு நாளும் வன்முறைகளைச் சந்திக்கும் பெண்கள் பல்லாயிரம்


மே,21,2015 வன்முறையின் பல பயங்கரமான விளைவுகளை ஒவ்வொருநாளும் அனுபவிப்பது பெண்களே என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 19, இச்செவ்வாய் முதல், 21, இவ்வியாழன் முடிய வியன்னாவில் நடைபெற்ற, குற்றத்தடுப்பு, மற்றும் நீதி அவையின் 24வது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. அவை உயர் அதிகாரி, யூரி பெதொத்தோவ் (Yuri Fedotov) அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஐ.நா. அவை வெளியிட்டுள்ள ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2012ம் ஆண்டு, உலகெங்கிலும் கொலையுண்ட பெண்களில், 43,000த்திற்கும் அதிகமானோர், தங்களுடைய குடும்பத்தினர் அல்லது நெருங்கிய உறவினரால் கொல்லப்பட்டனர் என்பது தெரிய வருகிறது.

கொலை என்பது வன்முறையின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்றும், கொலை செய்யப்படாமல், ஒவ்வொரு நாளும் வன்முறைகளை அனுபவித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் பல்லாயிரம் என்றும் ஐ.நா. அதிகாரி, பெதொத்தோவ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

போர்ச்சூழல்களால் வீடுகளையும், குடும்பங்களையும் இழந்த பெண்கள், முகாம்களில் பாலியல் கொடுமைகளுக்கும், ஏனைய பாகுபாடுகளுக்கும் உள்ளாகும் அவலத்தைக் குறித்தும் பெதொத்தோவ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆண்-பெண் இனப்பாகுபாடுகளை நீக்க, கல்வி அறிவு ஒரு முக்கியத்  தேவை என்றாலும்,ஒவ்வொரு நாட்டிலும், இப்பாகுபாடுகளை முற்றிலும் அகற்றும் சட்டங்கள், தீவிரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பெதொத்தோவ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.