2015-05-21 15:45:00

இத்தாலியக் காவல்துறை வீரர்களைப் பாராட்டிய திருத்தந்தை


மே,21,2015 நேர்மையான ஒரு தொழிலில் முழு ஈடுபாட்டுடன், அர்ப்பணத்துடன் ஈடுபடும்போது, அது ஒரு தனி மனிதரை மட்டும் மேன்மைப்படுத்துவதில்லை, மாறாக, அவரைச் சுற்றியுள்ள சமுதாயத்தையே அது மேன்மைப்படுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலியக் காவல்துறைப் பணியில் ஈடுபட்டு, தங்கள் உயிரை இழந்தோர், மற்றும் உடலால் காயப்பட்டோர் ஆகியோரின் குடும்பங்களைச் சார்ந்த 600க்கும் மேற்பட்டவர்களை, மே 21, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிய காவல்துறை வீரர்களையும், அவர்களின் குடும்பங்களையும் பாராட்டினார்.

இத்தகையப் பணியில் உயிரிழந்தோரின் குடும்பங்களில் பலர், தங்கள் உறவினரின் பணியைத் தொடர்ந்து ஆற்ற முன்வருவது, உயிரிழந்தவரின் அர்ப்பணத்தையும், கடமை உணர்வையும் பறைசாற்றுகிறது என்று திருத்தந்தை தன் வாழ்த்துரையில் கூறினார்.

ஆபத்தில் இருப்போரைக் காப்பது, ஆபத்தை விளைவிப்போரைக் கட்டுப்படுத்துவது என்ற செயல்களை, துணிவுடன் ஆற்றுவோர் இருப்பதாலேயே, இச்சமுதாயம் அமைதியுடன் வாழ முடிகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

அண்மைய ஆண்டுகளில் காவல்துறையினர் இத்தாலியக் கரையை அடையும் புலம் பெயர்ந்தோரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது மிகவும் போற்றுதற்குரியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.

வலுவற்றோரின் சார்பில் அவர்களைக் காக்க நீங்கள் முயலும்போது, கிறிஸ்தவ மற்றும் நன்னெறி விழுமியங்கள் இவ்வுலகில் உயிரோடு உள்ளதென்பதை பறைசாற்றுகிறீர்கள் என்று இத்தாலியக் காவல்துறையினரின் குடும்பங்களைச் சார்ந்தவர்களிடம் திருத்தந்தை கூறினார்.

அன்னைமரியாவும், காவல்துறையினரின் பாதுகாவலரான தலைமைத் தூதர், புனித மிக்கேலும் காவல்துறைப் பணியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டுமென்ற ஆசீருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.