2015-05-20 16:08:00

ரொமேரோ விழாவில் பங்கேற்கும் 12 நாடுகளின் அரசுத் தலைவர்கள்


மே,20,2015. மே 23, வருகிற சனிக்கிழமையன்று எல் சால்வதோர் நாட்டின் இறையடியார், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வுக்கு அந்நாட்டின் தலைநகர் சான் சால்வதோர் முழுவீச்சில் தயாராகி வருகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த முக்கிய நிகழ்வையொட்டி, சான் சால்வதோரில் 2,50,000த்திற்கும் அதிகமான மக்கள் கூடிவருவர் என்றும், 12 நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கேற்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எல் சால்வதோர் நாட்டின் அனைத்து பங்குகளும், பல்வேறு உலக கத்தோலிக்க அமைப்புக்களும் இணைந்து, மே 22ம் தேதி, வெள்ளியன்று சான் சால்வதோர் பேராலயத்திற்கு திருப்பயணம் மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, எல் சால்வதோர் பள்ளிகளில் அவரைப் பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன என்று, சான் சால்வதோர் பேராயர் ஹோசே லூயிஸ் எஸ்கோபார் (José Luis Escobar) அவர்கள் கூறினார்.

பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் உயிரோடு இருந்தபோது தன் கருத்துக்களை Y.S.A.X. என்ற வானொலி வழியே பரப்பி வந்தார். பேராயரின் கருத்துக்களை விரும்பாத சக்திகள், இந்த வானொலி மீது குண்டுத் தாக்குதல் நடத்தின. அரசின் அடக்குமுறையால் தடைப்பட்டுப் போன Y.S.A.X.. என்ற வானொலியை, எல் சால்வதோர் தலத்திருவை, மீண்டும் துவக்கும் திட்டங்களை வகுத்துவருகிறது என்று, Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.