2015-05-20 16:34:00

புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு அடித்தளம், வறுமையும், போரும்


மே,20,2015. வறுமை, குடிபெயர்ந்தொரை உருவாக்குகிறது; போர், புலம்பெயர்ந்தோரை உருவாக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிகள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்தப் பேட்டியொன்றில், புலம்பெயர்ந்தோர் பிரச்சனையை ஐரோப்பிய ஒன்றியம் எவ்விதம் அணுகுகிறது என்பது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டார்.

அண்மைய மாதங்களில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மூன்று நாட்களுக்கு முன் வழங்கிய ஒரு தீர்வு, பல ஐரோப்பிய நாடுகளால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கர்தினால் வேலியோ அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கத்தோலிக்கத் தன்னார்வத் தொண்டர்கள் உட்பட உலக அமைப்புக்கள் பல புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றுவந்தாலும், அரசுகள் எடுக்கும் முடிவே, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் கொணர முடியும் என்று கர்தினால் வேலியோ அவர்கள் வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு அடித்தளமாக விளங்குவது, பல நாடுகளில் காணப்படும் வறுமையும், போர்ச்சூழலும் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் வேலியோ அவர்கள், செல்வம் மிகுந்த நாடுகள், வளரும் நாடுகளில் இன்னும் அதிக முதலீடுகளைச் செய்து, மதிப்புள்ள வேலைகளை அங்கு உருவாக்கும்போது,  புலம்பெயர்ந்தோர் பிரச்சனை ஓரளவாகிலும் தீரும் என்று கர்தினால் வேலியோ அவர்கள் கருத்து வெளியிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.