2015-05-20 16:14:00

'புதிய காலநிலை பொருளாதாரம்' கருத்தரங்கிற்குச் செய்தி


மே,20,2015. இன்றைய, மற்றும், நாளைய தலைமுறையினரைக் காப்பதற்கு, பொருளாதார முன்னேற்றமும், இருப்பதைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வளர்ச்சியும் இணைந்து செல்லக்கூடிய இரு கூறுகளாக இருக்கவேண்டும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 20, இப்புதனன்று, உரோம் நகரின் திருச்சிலுவை பாப்பிறைப் பல்கழைக் கழகத்தில் 'புதிய காலநிலை பொருளாதாரம்' என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கிற்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்ட ‘காரித்தாஸ் இன் வெரித்தாத்தே’ (Caritas in Veritate) என்ற சுற்றுமடலில், குறுகிய காலத்தில் இலாபம் திரட்டும் வழிமுறைகளை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும், இன்றைய உலகின் முன்னேற்றக் கொள்கைகள், மனித குலத்தின் நிலையான நன்மைக்கு ஆபத்தானவை என்றும் கூறியுள்ள வார்த்தைகளை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெருநாட்டின் தலைநகர் லீமாவில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, சுற்றுச்சூழலைப் பற்றி சரியான முடிவுகள் எடுப்பதற்கு இனி காலதாமதம் செய்வது ஆபத்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்தியின் வார்த்தைகளையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளார்.

நடைபெறும் கருத்தரங்கு சிறப்பாக அமைய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபம் நிறைந்த வாழ்த்துக்களையும் தான் அனுப்புவதாக, கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.