2015-05-20 16:05:00

நல்லாயன் கிறிஸ்துவைப்போல வாழ்ந்த பேராயர் ரொமேரோ


மே,20,2015. நல்லாயனாம் கிறிஸ்துவைப்போல பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களும் மென்மையான இதயம் கொண்டவராய், மக்களின் உண்மையான ஆயராகவும், மறைசாட்சியாகவும் வாழ்ந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 23, வருகிற சனிக்கிழமையன்று எல் சால்வதோர் நாட்டின் இறையடியார், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, புனிதர்படி நிலைகள் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் இவ்வாறு கூறினார்.

பேராயர் ரொமேரோ அவர்களின் நண்பராகவும், பல்கழைக்கழகப் பேராசியராகவும் இருந்த இயேசு சபை அருள் பணியாளர் ருத்திலியோ கிராந்தே (Rutilio Grande) அவர்கள், தன் பேராசியர் பணியைத் துறந்து, Campesinos என்றழைக்கப்பட்ட விவசாயக் கூலிகள் மத்தியில் உழைக்கச் சென்றதும், அவர் மேற்கொண்ட அப்பணியின் காரணமாக அவர் 1977ம் ஆண்டு கொல்லப்பட்டதும், இறையடியார் ரொமேரோ அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

வறியோரை மையப்படுத்தி, பேராயர் ரொமேரோ அவர்கள் உருவாக்கிய எண்ணங்கள், அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் உருவானவை அல்ல, மாறாக, அவை நற்செய்தியின் அடிப்படையில் உருவானவை என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.