2015-05-20 15:09:00

திருத்தந்தையின் மறைக்கல்வி – குழந்தைகளுக்கு கற்பிக்கும் பணி


மே,20,2015. இப்புதன் திருத்தந்தையின் மறைக்கல்வி உரையைக் கேட்க, திருப்பயணிகள், சுற்றுலாப் பயணிகள் என உரோம் நகர் தூய பேதுரு வளாகம் நிரம்பி வழிய, குடும்பம் குறித்த தன் மறைக்கல்வி உரையில்,  குழந்தைகளுக்கு கற்பிக்கும் பணி குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பம் குறித்த நம் இன்றைய மறைக்கல்வித் தொடரில், குழந்தைகளுக்கு குடும்பங்களில் வழங்கப்படவேண்டிய கல்வி குறித்து நோக்குவோம். ஒரு நலமான சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஆழமான மனித மதிப்பீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதற்கும், குழந்தைகளுக்கு கல்வியறிவை ஊட்டுவதற்கும் குடும்பங்கள் சிறப்பான அழைப்பைப் பெற்றுள்ளன. முக்கியத்துவம் நிறைந்த, கல்வியறிவித்தலுக்கான இந்த பணிஅழைப்பு இந்நாட்களில் பல்வேறுப் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் குறைவான நேரத்தையே செலவிடுகின்றனர். மாணவர்களின் எண்ணப்போக்கையும் மதிப்பீடுகளையும் வடிவமைப்பதில், பலவேளைகளில் பெற்றோரைவிட பள்ளிகளே அதிகப் பங்கை, தாக்கத்தைக் கொண்டுள்ளன. இருப்பினும் குடும்பங்களுக்கும் கல்விக்கூடங்களுக்கும் இடையேயான உறவு, இணக்கம் நிறைந்ததாக இருக்கவேண்டும். குழந்தைகள் தங்களைப் பொறுத்தவரையிலும், அயலார்களுடனும் பொறுப்புணர்வில் வளர்ந்திடும் வேளையில், அவர்களுக்கு உறுதியான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. கல்வி கற்பிப்பதற்கான குடும்பங்களின் பணியில் ஆதரவு வழங்கி ஊக்கமளித்திட கிறிஸ்தவ சமூகங்கள் அழைப்புப் பெற்றுள்ளன. இப்பணியை கிறிஸ்தவ சமூகங்கள், அனைத்திற்கும் மேலாக, இறைவார்த்தைக்கு விசுவாசமாக இருந்து வாழ்வதன் வழியாகவும், விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் வளர்ப்பதன் வழியாகவும் ஆற்றுகின்றனர். இயேசுவும் ஒரு குடும்பத்திலேயே வளர்ந்தார். இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் அனைவரும் தன் சகோதர சகோதரிகள் எனக் கூறும் இயேசு, குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியில் அவரின் உள்தூண்டுதலையும் அருளையும் வழங்குகிறார். அது மட்டுமல்ல, குடும்பங்களில் தங்கள் குழந்தைகளுக்கு  கல்வி கற்பிக்கும் பணியானது, பல்வேறு இடர்களை எதிர்நோக்குவதாக இருப்பினும், வெகுமதி அளிக்கும் ஒன்று என்பதையும் சொல்லித் தருகிறார்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 24ம் தேதி ஞாயிறன்று, சீனக் கத்தோலிக்கர்கள் அன்னைமரியிடம் சிறப்பு செபவழிபாடு நடத்தவிருப்பதை அங்குக் குழுமியிருந்த அனைவருக்கும் நினைவூட்டி, அந்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்தார். மேலும், இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும் மக்களுக்காக சிறப்பான விதத்தில் செபிக்கும் நோக்கில் பெந்தகோஸ்தே திருவிழாவுக்கு முந்தைய நாள் திருவிழிப்பு செபவழிபாட்டை நடத்த இத்தாலிய ஆயர் பேரவை திட்டமிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீறமுடியாக் கூறைக் கொண்டுள்ள மனிதரின் மத சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த இந்தச் செப திருவிழிப்பு உதவட்டும் என உரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.