2015-05-20 15:35:00

அமைதி ஆர்வலர்கள் – 1982ல் நொபெல் அமைதி விருது – பாகம்2


மே,20,2015.  பேரழிவுப் போராயுதங்களாக உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள் உலகில் முற்றிலும் ஒழிக்கப்படுமாறு உலக நாடுகளுக்கு அடிக்கடி விண்ணப்பங்கள் முன்வைக்கப்படுகின்றன. வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவிய பனிப்போர் முடிவடைந்ததோடு அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலும் முடிந்துவிட்டது என்று அமெரிக்கர்களில் பலர் கருதுகின்றனர், ஆனால், அது உண்மையல்ல என்று, கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுச் செயலர் ஜான் கெர்ரி அவர்களுக்கு அமெரிக்க ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக் குழு தலைவர் ஆயர் Oscar Cantu அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இரஷ்யாவில் 15 ஆயிரம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 9,900, பிரான்சில் 350, சீனாவில் 200, பிரித்தானியாவில் 200, இஸ்ரேலில் 80, பாகிஸ்தானில் 60, இந்தியாவில் 50, வட கொரியாவில் 10 என இன்றைய உலகில் ஒன்பது நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன, இவை பயன்படுத்தப்பட்டால் உலகில் பேரழிவு ஏற்படும் என்று ஓர் ஊடகம் கூறுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அணுகுண்டு ஏற்படுத்திய கடும் சேதம் அமைதி ஆர்வலர்களை அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்கு ஓங்கி குரல் எழுப்பத் தூண்டியுள்ளது.  இப்படி குரல் எழுப்பி அதற்காக உழைத்த Alva Myrdal, Alfonso Garcia Robles ஆகிய இருவருக்கும் 1982ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.  இவர்கள் இருவருமே உலகில் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் அணு ஆயுதக் களைவுக்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக இவ்விருதைப் பெற்றனர். இவ்விருவரில் சுவீடன் நாட்டு Alva Myrdal அவர்கள் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். இன்று Alfonso Garcia Robles அவர்கள் பற்றிக் கேட்போம்.

மெக்சிகோ நாட்டின் Zamoraவில் 1911ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த Alfonso García Robles

அவர்கள், மெக்சிகோ தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பட்டயம் பெற்றார். இவர் 1939ம் ஆண்டில் மெக்சிகோவின் வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்னர், பாரிசில், பன்னாட்டு உயர் கல்வி நிறுவனத்திலும், நெதர்லாந்தில், ஹாக் அனைத்துலகச் சட்ட நிறுவனத்திலும் சட்டம் பயின்றார். 1962ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை பிரேசில் நாட்டு அரசியல் தூதராகவும், 1964ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அரசு செயலராகவும் பணியாற்றினார். 1971ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் மெக்சிகோவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், 1975ம் ஆண்டு  முதல் 1976ம் ஆண்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 1977ம் ஆண்டிலிருந்து, ஜெனீவாவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஐ.நா.வின் ஆயுதக்களைவுக் குழுவில் மெக்சிகோவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார் Garcia Robles.

இலத்தீன் அமெரிக்காவையும் கரீபியன் பகுதியையும் அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்றுவதற்கு 1967ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி Tlatelolco ஒப்பந்தம் உருவாக்கப்படவும், அதில் அப்பகுதியின் 22 நாடுகள் கையெழுத்திடவும் காரண கர்த்தாவாக இருந்தவர் Garcia Robles. உண்மையில், García Robles அவர்கள், Tlatelolco ஒப்பந்தத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரின் கடுமையான சொந்த உழைப்பால் இது உருவாக்கப்பட்டது. இத்தகைய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்படுமாறு, அப்போதைய மெக்சிகோ அரசுத்தலைவர் Adolfo López Mateos அவர்கள் பரிந்துரை ஒன்றை முன்வைத்தார். அச்சமயத்தில் ஏற்பட்ட கியூபா நாட்டுப் பிரச்சனையால் இந்தக் கருத்து முன்மொழியப்பட்டது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தைத் அமல்படுத்துவதன் வழியாக, உலகில் பெரும் வல்லரசுகளுக்கு இடையே எந்தவிதச் சண்டை இடம்பெற்றாலும், அதில் இந்தப் பகுதி நாடுகள் தலையிடாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலே இத்தகைய  உடன்பாடு தேவை என உணரப்பட்டது. இது குறித்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு García Robles அவர்கள் நாடுகளில் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். இவரின் தூதரகத் திறமை இதற்குப் பெரும் உதவியாக இருந்தது. சில ஆண்டுகளாக, தொடந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக, இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. எனினும், இதில் கையெழுத்திட்டுள்ள பிரேசிலும், அர்ஜென்டீனாவும் இதனை அமல்படுத்த வேண்டியிருக்கின்றது.

உலகில் ஆயுதக் களைவுக்கு ஐ.நா. ஆற்றிவரும் பணியில் García Robles அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் மெக்சிகோ பிரதிநிதியாக இவர் பங்கேற்றார். 1978ம் ஆண்டில் நடைபெற்ற ஆயுதக் களைவு குறித்த ஐ.நா.வின் முதல் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகளையும் கருத்துக்களையும் முன்வைத்து இறுதி அறிக்கை வெளியிடப்பட்டதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. Alfonso García Robles அவர்கள் 1991ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, தனது 80வது வயதில் சிறுநீரகப் பிரச்சனையால் மரணமடைந்தார். இவரின் இறப்பையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்ட அப்போதைய ஐ.நா.பொதுச் செயலர் Perez de Cuellar அவர்கள், இலத்தீன் அமெரிக்காவை மட்டுமல்ல, இந்த முழு உலகையும் அணு அச்சுறுத்தலற்ற இடமாக மாற்றுவதற்குப் பெரும் தூண்டுதலாய் இருந்த மாபெரும் ஆர்வலர்களில் ஒருவரை உலகம் இழந்து விட்டது என்று கூறினார். García Robles அவர்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மாபெரும் மனிதர், இவர் உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்  என்றும் பாராட்டினார் Cuellar. Garcia Robles அவர்கள் பன்னாட்டு விவகாரங்கள் பற்றி 18 நூல்களை எழுதியிருக்கிறார். மெக்சிகோ அரசு, அனைத்து மரியாதைகளுடன் இவரது இறுதி ஊர்வலத்தை நடத்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.