2015-05-19 16:15:00

நேபாள நிலநடுக்கப் பின்னணியில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள்


மே,19,2015. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் தலைநகர் காத்மண்டுவில் ஏறக்குறைய 90 விழுக்காட்டுக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, இவற்றில் 80 விழுக்காட்டில் குடியிருப்பது மிகவும் ஆபத்தானது, ஆயினும், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளை அரசு இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டு மாடிக்கு மேல் கட்டடங்கள் கட்டும் அனைத்துக் கட்டுமானத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ள நேபாள அரசு, அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அரசு விதித்துள்ள இந்தக் கட்டுமானத் தடை வருகின்ற ஜுலை மாதம் 16ம் தேதிவரை அமலில் இருக்கும் என அந்நாட்டு வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கட்டடங்கள் கட்டப்படுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவரும்வேளை, அந்நாட்டில் கட்டப்பட்டுவரும் தங்குமிடங்கள்கூட, நில நடுக்கங்களைத் தாங்கும் வண்ணம் கட்டப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.